தமிழகத்தின் மாநில உரிமைகளை பாஜக அரசு சிதைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் விருது சத்திய சீலனுக்கும் அண்ணா விருது சுந்தரத்திற்கும் கலைஞர் விருது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் பாவேந்தர் பாரதி தாசன் விருது மல்லிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது ராமசாமிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
முப்பெரும் விழாவில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “1949-ஆம் ஆண்டு திமுக உதயமானது. 75 ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தின் காவல் அரணாக திமுக செயல்பட்டு வருகிறது. ஆறு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறோம். ஒரு பக்கம் ஆட்சி இன்னொரு பக்கம் கட்சி இந்த இரண்டின் மூலமாகவும் தமிழகத்தை அனைத்து மாநிலங்களை விட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.
இடையிடையே கொள்கையற்ற அதிமுக கூட்டம் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சீரழித்தாலும் அதையும் திருத்தி தமிழகத்தை வளர்த்து வருகிறோம். தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. மாநில உரிமைகளை பாஜக அரசு சிதைக்கிறது. ஜிஎஸ்டி வரி மூலம் மாநில உரிமையை பறித்தார்கள். வரியை முறையாக மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுப்பதில்லை. கல்வி மிக மிக முக்கியமான துறை. புதியகல்வி கொள்கை மூலம் மாநில அரசின் கல்வி வளர்ச்சியை முடக்குகிறார்கள். மத்திய அரசின் கல்வி வளர்ச்சியை தமிழகம் எப்போதோ எட்டிவிட்டது.
கல்வியில் சிறந்த மாநிலமான தமிழகத்தை முடக்குவதற்காக தான் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளனர். மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்க நீட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளனர். லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். அனிதா முதல் ஜெகதீசன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களிலும் நீட் தேர்வு தற்கொலை அதிகரித்துள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி ஜார்கண்ட் மாணவி ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வுக்கான காரணத்தை பாஜக ஆரசு ஆராய்ந்ததா. இரக்கமற்ற அரசாக மோடி அரசு உள்ளது.
நேற்று தாய்மார்கள் மோடியிடம் கேட்கிற மாதிரி ஒரு மீம்ஸ் பார்த்தேன். எங்கள் முதல்வர் சொன்ன ஆயிரம் வந்திருச்சு பிரதமர் சொன்ன 15 இலட்சம் என்னாச்சு . இந்த மீம்ஸ் வைரல் ஆகிவிட்டது. புதிதாக எந்த வாக்குறுதிகளையும் மோடியிடம் கேட்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டினாரா. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவனை அமைப்பதாக 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போது தான் டெண்டர் விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக்கூடாது என்பதற்காக தான் மற்ற பிரச்சனைகளை கிளப்பி குளிர்காய பார்க்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது சமையல் சிலிண்டர் விலை ரூ.420 இதனை ரூ.1100-ஆக உயர்த்தியது தான் மோடியின் சாதனை.
தேர்தல் கண்துடைப்பிற்காக இப்போது ரூ.200 குறைத்துள்ளார்கள். 2014-ஆம் ஆண்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71 இப்போது ரூ.102 மத்திய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளார்கள். 2014-ஆம் ஆண்டு டீசல் ரூ.55 இப்போது ரூ.94 ஏழு மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளில் 100 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது பாஜக அரசு. ஆட்சிக்கு வந்தபோது 55 இலட்சம் கோடி இருந்த கடன் ஒன்பது ஆண்டுகாலத்தில் 155 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி கடனை வாராக்கடன் என்று கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள். வேதனை மட்டுமே மக்களுக்கு கொடுக்கும் பாஜக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில் 7.5 இலட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிபிஐ அதிகாரிகள் சிக்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பாஜகவின் ஊழல் முகத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும்.
நம் ஆட்சி மத்தியில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி எழுப்பப்படும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும். தமிழ்நாட்டிற்கு தேவையான ஏராளமான ரயில் திட்டங்களை கொண்டு வர முடியும். புதிய விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடியும். இங்கு நாம் அமல்படுத்திக்கொண்டிருக்கிற திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம் என்று வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!