ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,
“ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் வைப்பீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு மாத வட்டி என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களுக்கு ரூ.2438 கோடி ரூபாய் முதலீடு வட்டி திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
அந்த புகார் மீது தான் திமுக ஆட்சியில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து இன்று உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டு இயக்குனர்கள், ஏஜெண்டுகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர், உஷாராணி ஆகியோரை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ரொக்கம், வங்கி கணக்கில் இருந்த பணம் ரூ.96 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனை போன்று Hijau, Eifin, IFS, Chits, CVRS, Rahat உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கையை இந்த ஆட்சி எடுத்து இருக்கிறது.
குற்றவாளிகளை கைது செய்து அவர்களது சொத்துக்கள் முடக்கம், வங்கி கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவற்றில் Hijau, IFS, Eifin, Rahat ஆகிய நிறுவனங்கள் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டன. இதுபோன்ற நிதிநிறுவன மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக IFS நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த அவையின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். மக்களிடம் ஆசையை தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய நிதி நிறுவனங்களை கண்காணிக்குமாறு நான் காவல்துறையை உத்தரவிட்டிருக்கிறேன்.
இத்தகைய நிறுவனங்களின் மோசடியை தடுக்க கலைஞர் ஆட்சியில் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது” என்று தெரிவித்தார்.
செல்வம்
இளையராஜாவுடன் இணையும் பிரேமம் பட இயக்குநர்!
“போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள்”: ஸ்டாலின்