கூட்டணிக் கட்சிகளால்தான் முதல்வர் ஆனேன்!- ஸ்டாலின்

அரசியல்

தேர்தல் கூட்டணி என்றால் தேர்தலுடன் முடிந்து விடும் கொள்கை கூட்டணியாக இருப்பதால் நம் கொள்கை வெற்றி பெறும் வரை தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாட்டை ஒட்டி நேற்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, அக்கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டுக்கு நேரில் வருவதாக இருந்த முதல்வர் ஸ்டாலின் பிறகு தவிர்க்க முடியாத காரணங்களால் தனது வருகையை ரத்து செய்து காணொளி மூலமாக உரையாற்றினார். திமுக சார்பாக திருப்பூர் மாவட்ட அமைச்சர்களான வெள்ளக்கோவில் சாமிநாதன், மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய ஸ்டாலின், “கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட நான், சில நாட்களாக வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது என்ற மருத்துவர் கட்டளைப்படி நேரடியாக திருப்பூருக்கு வருகை தர இயலாத சூழல் எனக்கு ஏற்பட்டுவிட்டது. தோழமைக் கட்சியை சார்ந்து இருக்கக்கூடிய தலைவர்களாகிய நீங்கள் அனைவரும் இதை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்”என்று முதலில் தான் நேரில் வர இயலாத சூழலை விளக்கினார் முதல்வர்.

மேலும், ”கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறும் இந்த நாளில், இத்தகைய அறிவிப்பு வெளியிட்டதில் பெருமை அடைகிறேன்.என்றார்

திராவிட மாடல்; தமிழ்நாடு மாடல் – விளக்கம்!

தொடர்ந்து அவர் பேசுகையில், ”வளமான தமிழ்நாட்டை, அனைவருக்குமான தமிழ்நாட்டை திராவிட மாடலில் நாம் உருவாக்கி வருகிறோம். இந்த திராவிட மாடல் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் தத்துவமாக அமைந்துள்ளது. நான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன். இது எனக்குத் தானாக வந்து விடவில்லை. தோழமைக் கட்சிகளாகிய உங்களின் பேராதரவுடன் இந்த இடத்தில் உங்களால் அமர வைக்கப்பட்டுள்ளேன்.

வளர்ச்சித் திட்டம் மட்டும் இருந்து, சமூக மேம்பாடு இல்லாமல் போய்விட்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை. அதை மனதில் வைத்துத்தான் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். மதவாதத்துக்கு எதிரானது திராவிடம், சாதியவாதத்துக்கு எதிரானது திராவிடம், சனாதனத்துக்கு எதிரானது திராவிடம், வர்ணபேதத்துக்கு எதிரானது திராவிடம், இரத்த பேதத்துக்கும், பால் பேதத்துக்கும் எதிரானது திராவிடம், எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மத்துக்கு எதிரானது திராவிடம், யாரையும் பிரித்துப் பார்க்கும் வஞ்சகத்துக்கு எதிரானது திராவிடம்.

எனவே தான் ‘திராவிட மாடல்’ என்று ஆட்சியின் கொள்கையை வடிவமைத்திருக்கிறோம். இதற்கு ஏன், ‘தமிழ்நாடு மாடல்’ என்று பெயர் வைக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு என்றால் அது இடத்தைக் குறிக்கும். ஆனால் திராவிடம் என்று சொன்னால் தான், அது ஒரு கொள்கையை, கோட்பாட்டை, அது குறித்து நிற்கும் விழுமியங்களைக் குறிக்கும். திராவிடம் என்பது தமிழ்நாட்டு அரசியலில் சமத்துவத்தை உணர்த்தி நிற்கும் குறிச்சொல். திராவிடம் என்பது தமிழினத்தின் சமூக விடுதலைக்கு அடையாளமாக இருக்கும் வரலாற்றுச் சொல், சமூகநீதி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், மொழிப்பற்று, இனப்பற்று ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் தான், இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக பொய்யையும், அவதூறுகளையும் நாள்தோறும் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

எது தேச விரோதம்?

சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு – மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு என்று இந்த மாநாட்டுக்குப் பெயர் சூட்டி இருக்கிறீர்கள். சமூக, மத நல்லிணக்கத்தின் அடையாளம்தான் காந்தி. அந்த நல்லிணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பவர்களால் அவர் கொலை செய்யப்பட்டார். சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது, மாநில உரிமைகளை சிதைப்பது என இந்திய நாட்டிற்கு இன்று இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. இந்தியா என்பதை, வெறும் நிலப்பரப்பாகவோ, எல்லைகளாகவோ நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள் தான். அத்தகைய அனைத்து மக்களுக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் – இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கி உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்.

பல்வேறு மொழி, இனம், பண்பாடுகளைக் கொண்ட மக்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த குறிக்கோளோடு இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமை, அனைத்து மதத்தவருக்கும் சமமான வழிபாட்டு உரிமைகள், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்திருந்தாலும் அண்டை மாநிலங்களோடு நட்புறவு என எத்தனையோ நல்ல நோக்கங்களுடன் அமைதியாக இந்தியா இருப்பதைச் சிலர் விரும்பவில்லை.

இதைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சக்திகள்தான் தேச விரோத சக்திகள். இவர்கள்தான் நாட்டினுடைய எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உலை வைப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் நம்மைப்பார்த்து தேச விரோதிகள், நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்று பேசுவது தேச விரோதமா? அல்லது ஒரே மதம், ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேசவிரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்” என்றார்.

தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி!

தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளின் முக்கியத்துவத்தை முதல்வர் ஸ்டாலின் எடுத்து கூறினார். அவர் கூறுகையில், சமூக விடுதலை பேசிய திராவிட இயக்கமும், விடுதலை பேசிய காங்கிரஸ் கட்சியும், பொருளாதார வர்க்க விடுதலை பேசிய கம்யூனிஸ்ட் இயக்கமும் இன்றைக்கு ஒரே மேடைக்கு வந்திருக்கிறோம் என்றால் இன்று அனைவரும் பேச வேண்டியது சமூக நல்லிணக்கமும் மாநில உரிமைகளும் தான். தனித்தனியாக போராடி வந்த நாம் இன்று ஒன்றாக போராட வேண்டி ஒன்று சேர்ந்துள்ளோம். அதனால்தான் இது தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தேர்தல் கூட்டணி என்றால் தேர்தலுடன் முடிந்து விடும். கொள்கை கூட்டணியாக இருப்பதால் நம் கொள்கையில் வெற்றி பெறும் வரை தொடந்து ஒற்றையாட்சியை எதிர்த்து நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து உறுதியோடு குரல் கொடுக்க வேண்டும். அதற்கு இத்தகைய மாநாடுகள் அடித்தளம் அமைக்கட்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்!

+1
1
+1
0
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *