புதுச்சேரியிலும் திமுக ஆட்சி: மு.க. ஸ்டாலின்

Published On:

| By Monisha

புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 12) கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

அப்போது அவர், “திராவிட இயக்கத்தின் இலக்கிய தலைநகர் என்று சொல்லப்பட்டது தான் இந்த புதுச்சேரி.

தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் ஆட்சி மலர்ந்திருக்கிறது. இதனைத் திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையுடன் சொல்கிறோம். அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது அவசியம் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் கிடைக்கவில்லை. அது பற்றி கவலைப்பட வேண்டாம். இப்போது இதே புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது மக்களுக்காக நடைபெறுகிறதா?.

ஒரு ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுவையில் ஒரு ஆட்சி நடைபெறுகிறது என்றால், இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

புதுவையில் இப்படி ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் தான் நமது சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியில் திமுக ஆட்சி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது தவறல்ல.

ஏற்கெனவே திமுக ஆட்சி புதுவை மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. எனவே நிச்சயமாக திமுக ஆட்சி புதுவை மாநிலத்தில் உதயம் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விரைவில் புதுவை மாநிலத்தில் நாம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல அதற்கு அடுத்து நடக்கக் கூடிய சட்டமன்ற தேர்தலிலும் புதுவையில் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு இப்போதே நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

கூட்டணி குறித்துத் தேர்தல் நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

மோனிஷா

தங்கம் விலை : இன்றைய நிலவரம்!

தங்கைக்கு வினோத சீர் கொடுத்த அண்ணன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share