“வரும் ஜனவரியில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதே முக்கிய நோக்கம். அதற்காகவே பயணம் மேற்கொள்கிறேன்” என்று சிங்கப்பூர் புறப்படும் முன் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று (மே 23) காலை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்ற நிலையில், அவரது பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், “அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறேன்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் துபாய் நாட்டிற்கு சென்றேன். அதன் மூலமாக ரூ.6,100 கோடி முதலீடும், 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
அதன் தொடர்ச்சியாகவே இப்போது ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளேன்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு, முதலீட்டார்களை நேரிலும் சந்தித்து பேச இருக்கிறேன்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் வரும் ஜனவரியில் சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதே.
அதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில்வளத்தையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் பெருக்குவதே முக்கிய நோக்கம். அதற்காகவே பயணம் மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சிங்கப்பூர் செல்லும் முதல்வர்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை!
வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!