மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் இன்று (ஜனவரி 25) வீரவணக்க மரியாதை செலுத்தினர்.
1938 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாக நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் போராட்டத்தில் கடுங்காவல் தண்டனையுடன் சிறை சென்று தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் தமிழுக்காய் உயிர் நீத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக எதிராக தொடர் போராட்டங்களில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தமிழ் மொழி உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதன்படி மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சென்னை மூலக்கொத்தளத்தில் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அவர்களின் உருவப் படத்துக்கு ஸ்டாலின் மலர் தூவி வீரவணக்க மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அதே போன்று விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தங்கள் கட்சியினருடன் சென்று மூலக்கொத்தளத்தில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
அதுமட்டுமல்ல, சகோதரர் திருமாவளவன் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகையில் அவர்தம் திருவுருவச் சிலைகளையும் நிறுவிடுவோம்!
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும், தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை காக்க, தங்களின் உயிரை துச்சமென நினைத்து, வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களை நினைவுகூறும் மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினம் இன்று.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் குறிப்பிட்ட மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு எதிராக இறுதிவரை போராடி ”தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தோடு உயிர்நீத்த நூற்றுக்கணக்கான தியாகிகளின் தியாக உணர்வை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.

தவெக தலைவர் விஜய்
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!