தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஜப்பான் சென்றார். அந்நாட்டின் ஒசாகா மாகாணத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “இந்திய நாட்டின் தமிழ்நாடு என்ற தனிப்பெரும் மாநிலத்தின் முதல்வராக ஜப்பானின் ஒசாகா நகரத்திற்கு நான் வருகை தந்துள்ளேன்.
மிக அழகான கம்பீரமான கட்டிடக்கலை கொண்டது ஒசாகா நகரம். அற்புதமான உணவுகள் கிடைக்கக்கூடிய நகரம்.
நட்பை பேணக்கூடிய மக்கள் வாழும் நகரம். எனக்கு ஜப்பான் புதிதல்ல. உங்களுக்கு நானும் புதியவன் அல்ல.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஜப்பான் நாட்டின் நிதிஉதவியை பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.
மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக முக்கியமான திட்டங்களாகும். அப்பொழுது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம். ஜப்பான் நாடு எங்களை கைவிடவில்லை.
2010-ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் தொழில்துறை கூட்டுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது நான் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்தேன்.
ஜப்பான் நாட்டின் தொழில்துறை, வர்த்தகத்துறை அமைச்சர் வருகைதந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் அலுவலகத்தை அப்போது அவர் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அந்த அலுவலகத்தை ஜப்பான் தொழில்துறை அமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று அந்த அலுவலகம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 10,11ஆகிய தேதிகளில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநாட்டிற்கு நீங்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்