எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ”எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற துணைப்பெயர் இருக்கிறது?” என்று பேசினார்.
இந்த பேச்சுக்கு பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடி மற்றும் மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எச்.வர்மா இன்று தீர்ப்பளித்தார்.
அதேவேளையில், அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கியதுடன், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வேதனை
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் தொலைபேசி வாயிலாக தற்போது பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குற்றம் சாட்ட வேண்டும் என்ற மனதுடன் சொல்லவில்லை என்று ராகுல்காந்தி கூறிய பின்பும், அவர் கூறிய கருத்துக்காக தண்டிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் “எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. விரைவில் இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும்.
ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் எனது ஆதரவை தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நான் நம்புகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சூரத்திலிருந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்தியை டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
19,000 பேரை பணி நீக்கம் செய்யும் அக்செஞ்சர்!
எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!