பிரதமரை சந்திப்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்

அரசியல்

தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவூட்ட இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) காலை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்த முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

mk Stalin Press Meet In Delhi

இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து தில்லியில் உள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று, முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

mk Stalin Press Meet In Delhi

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று காலை குடியரசு துணைத் தலைவரையும், குடியரசு தலைவரையும் நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் அழைப்பு வந்தும் ஒரு சில காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இன்று இருவரையும் நேரடியாக சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ஆட்சியின் சிறப்பு குறித்து  என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள், இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது.

தொடர்ந்து இன்று மாலை 4.00 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளேன். சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று  பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கே வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதற்காகவே நன்றி தெரிவிக்க நேரில் வந்தேன். மாலை 4.00 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளேன்.

நான் முதலமைச்சராக  பொறுப்பேற்ற பின் 2,3 முறை டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்தேன். அந்த கோரிக்கைகளை ஓரளவு  நிறைவேற்றக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதையும் நினைவூட்ட இருக்கிறேன்.

நீட் தேர்வு,புதிய கல்வி கொள்கை, மின்சாரம், காவிரி விவகாரம், மேகதாது பிரச்சனை என பல கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வைத்து வருகிறோம். இவற்றை மீண்டும் நினைவு படுத்துவோம்.. திரெளபதி முர்மு புதிதாக பதவி ஏற்றதால் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என தெரிவித்தார்.

  • க.சீனிவாசன்

இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *