ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (மார்ச் 23) சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் கேம்களை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் அவசர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட அவசர சட்ட மசோதாவிற்கு மாற்றாக, நிரந்தர தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
அளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நவம்பர் 24-ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்.
24 மணி நேரத்திற்குள் தமிழக அரசின் சார்பில் ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் மார்ச் 8-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி மசோதாவை திருப்பி அனுப்பினார்.
அதில், மத்திய அரசின் கீழ் வரும் ஆன்லைன் சூதாட்ட சட்டத்தில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக மக்களவை எம்.பி. பார்த்திபன் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அளித்துள்ள பதிலில்,
ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்கு கொண்டு வர சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இன்று மீண்டும் தாக்கல் செய்கிறார். இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது.
செல்வம்
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!