திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் தந்த பொங்கல் ஷாக்!

அரசியல்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி இன்று (ஜனவரி 13) முடிவடைந்தது.

சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் சட்டமன்ற வளாகத்திலேயே திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது மாவட்ட அமைச்சர்களிடம் நெருங்கி, ‘என்னண்ணே இப்படி பண்ணிட்டாங்க. சோலிய முடிச்சிட்டாங்களே…

அமைச்சர்களோ, ‘நான் இப்ப உன்னைப் பாத்து முழிக்கலையா… அதுபோல நீயும் போய் முழிக்க வேண்டியதுதான்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என்னாச்சு? ஏன் திமுக எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் இப்படி மாற்றி மாற்றி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்?

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாகியும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திருப்தியாக இல்லை என்பதையே பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

ஏற்கனவே பல அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்… தேர்தல் வேலை பார்ப்பதற்கும் டி.என்.பி.எஸ்.சி, மூலமாகவே ஆட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு கீழ் நிலை நிர்வாகிகளின் குரல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மெசேஜ் முதல்வர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அதனால் தீர ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து கூட்டுறவுத் துறைக்கு உட்பட்ட ரேஷன் கடைகள், கிராம உதவியாளர் எனப்படும் தலையாரி பணியிடங்களை கட்சியின் கிளைச் செயலாளர்களின் உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் இருந்து அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் தான் டிசம்பர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் 2,748 தலையாரி பணியிடங்களுக்கான அதாவது கிராம உதவியாளர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. வருவாய் துறைக்கு உட்பட்ட இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடத்தின.

மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்காகப் பல மாவட்டங்களில் பலத்த கிராக்கி நிலவியது.

இந்த பணியிடங்களை திமுக கிளைச் செயலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் தரப்பில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது என்றும் அதனால் இந்த வேலைகளை அவர்களுக்கு வேண்டும் இவர்களுக்கு வேண்டும் என்று யாரும் தன்னிடம் வரவேண்டாம் என்று தன்னை நாடிய எம்.எல்.ஏ.க்களிடமெல்லாம் அப்போதே வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்,ஆர்.ஆர். சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக இந்த தலையாரி பணியிடங்களுக்கான ஆணைகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலைப் பார்த்த பிறகுதான் இன்று சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், ‘இனி எந்த மூஞ்சிய வச்சிட்டு கட்சிக்காரன் முன்னாடி எப்படி போறது என்று ?’ ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாசெக்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பேசினோம். “இரண்டு மூன்று நாட்களாக தலையாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை மாவட்ட கலெக்டர்களால் வெளியிடப்பட்டு வருகிறது.

தென்காசி, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலினு லிஸ்ட் வெளியாகியிருக்கு. இந்த லிஸ்ட்ல கட்சிக்காரங்க கொடுத்த லிஸ்ட்படி யாருக்கும் வேலை கிடைக்கலை.
அதனால எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் கொந்தளிச்சுப் போயிருக்காங்க. உடனே அமைச்சர்களை போய் பாத்து, பொங்கலுக்கு நல்லா பரிசு கொடுத்திருக்காரு நம்ம தலைவரு. பொங்கல் முடிஞ்சு இந்த பட்டியலை ரிலீஸ் பண்ணியிருந்தாலாவது நாங்க சென்னை வந்து ஒளிஞ்சிருப்போம்.

பொங்கல் அதுவுமா கட்சிக்காரங்ககிட்ட வாங்கிக் கட்டிக்கப் போறோம்” என்கிறார்கள். மேலும் அவர்கள், ’கட்சியோட கிளைச் செயலாளர்கள் குடும்பத்தினருக்கு தலையாரி வேலை கொடுக்கணும்னுகுறது முதல்வர் போட்ட உத்தரவுதான்.

ஆனா தாசில்தார்கள் அனுப்பிய லிஸ்டை மாவட்ட கலெக்டர்கள் முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி அதை ஒ.கே.வாங்கியிருக்காங்க. எம்.எல்.ஏக்களும் மாசெக்களும் காசு வாங்கிட்டதா அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்துக்கு சொல்லியிருக்காங்க.

ஆனா இப்ப முழுக்க முழுக்க அதிகாரிகளால் போடப்பட்ட லிஸ்டுல அவ்வளவு முறைகேடு நடந்திருக்கு. அதே கிராமத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் குடும்பத்தினருக்கு நாங்க பரிந்துரைத்தோம். ஆனா கலெக்டர்கள் போட்ட லிஸ்டுல 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறவர்களை எல்லாம் தலையாரி வேலைக்கு போட்டிருக்காங்க.

அதிகாரிகளோட சாதிக்காரங்களுக்கு போட்டிருக்காங்க. இதுல முழுக்க முழுக்க அதிகாரிகளே விளையாடியிருக்காங்க. இதெல்லாம் முதல்வருக்கு எப்படி புரியவைக்கிறது?” என்று புலம்பித் தள்ளினார்கள்.

அதிகாரிகள் தரப்பிலோ, “முதல்வர் அலுவலகத்தின் இறுதி அனுமதிக்குப் பிறகுதான் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

-ஆரா

சென்னை சங்கமம்: களைகட்டும் கலை நிகழ்ச்சிகள்!

நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
1
+1
4
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *