மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் திருவுருவ படத்திற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நுரையீரலில் தொற்றால் பாதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி காலமானார். பொது மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக, அவரது உடல் டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச்செயலகமான ஏகேஜி பவனில் நேற்று (செப்டம்பர் 14) காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வைக்கப்பட்டது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சீதாராம் யெச்சூரியின் உடல் பயன்படத்தப்பட உள்ளது.
இந்தநிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு பெயர் மாற்றம்… அண்ணாவை நினைவுகூர்ந்த விஜய்
“அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர்” – மகாவிஷ்ணு வாக்குமூலம்!