மகாத்மா காந்தியின் 78-ஆவது நினைவு தினம் இன்று (ஜனவரி 30) அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகள் நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
காந்தி நினைவு தினத்தை ஒட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்திய விடுதலையை சத்தியாகிரகப் போராட்டம் மூலம் சாத்தியப்படுத்தி உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த மாமனிதர் காந்தியடிகளின் நினைவு நாள் இன்று.
சுதந்திர இந்தியாவில் மதவெறி காரணமாக காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுத் துயரம் நடந்த இந்நாளில், மனிதர்களாகப் பிறந்த அனைவரும் சமம், எவ்வித பேதமும் கூடாது என்கிற உணர்வினை என்றென்றும் விதைக்க உறுதி ஏற்போம். காந்தியின் பணிகளை போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை செயலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.