வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 1) கேரளா செல்கிறார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற இடத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. அந்த கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர், தீயர், புலையர் ஆகிய தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் பெரியார், அவரது மனைவி நாகம்மையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் 74 நாட்கள் சிறையில் இருந்தார்.
1924-ஆம் மார்ச் 30-ஆம் தேதி துவங்கிய இந்த போராட்டம் 1925-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தின் விளைவாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோவில் தெருக்களில் நடக்க அனுமதிக்கப்பட்டனர்.
வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறாண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தமிழக அரசு மார்ச் 30-ஆம் தேதி முதல் ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதனை போல கேரள அரசு சார்பிலும் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வைக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா செல்கிறார்.
மாலை 4 மணியளவில் வைக்கம் பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் வைக்கம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கலந்து கொள்கிறார்.
இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்