சேலத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை, ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 11) திறந்து வைத்தார்.
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 5 ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இரண்டாம் நாளான இன்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதல் நிகழ்வாக கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் 1,713 சதுர அடி பரப்பில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ரூ.96 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சேலம் நகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் தற்போது திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேபோல் புனரமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானம், நேரு கலையரங்கம், வ.உ.சி மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை மின்சார ரயில் தடம் புரண்டது!
பிரபலங்கள் பேச்சு… அமித்ஷாவின் ரியாக்ஷன்!