கோவை பல்லடம் இணைப்பு சாலை: புதிய பெயர் சூட்டிய முதல்வர்!

Published On:

| By Selvam

கோவை பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) அறிவித்துள்ளார்.

கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் அருட்செல்வர் டாக்டர் பத்மபூஷன் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் இன்று பங்கேற்றார்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி , செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இருக்க வேண்டும் என்று இருந்தேன். நாளை சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது, அதன் பணி காரணமாக விரைவில் செல்ல வேண்டும். அதற்கு உங்கள் அனுமதி தேவை.

அருட்செல்வர் என்றால் மகாலிங்கம் என சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். இது அவருக்கு பட்டப்பெயராக இல்லாமல் பண்புப்பெயராக அமைந்தது.

திருக்குறளை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். அவரை அருட்செல்வர் என்ற பெயரோடு தமிழ்செல்வர் எனவும் அழைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பணி இருந்தது. இவரை போல பல அருட்செல்வர்கள் உருவாக வேண்டும்

பல தொழில்களை ஒரே நேரத்தில் செய்தவர். 46 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இந்திய நதிகளை ஒன்றிணைக்கும் திட்டத்தை வகுத்து ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சித்தவர். 1952 – 67 வரை தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.

இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கோவை – பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் பெயர் சூட்டப்படும்.” என்று தெரிவித்தார்.

செல்வம்

மனுஷ்யபுத்திரனுக்கு புதிய பதவி!

புதுக்கோட்டை சம்பவம்: போராட்டத்தை அறிவித்த விசிக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share