முதல்வர் ஸ்டாலின், ஏழை மக்களுக்காக முதல் கட்டமாக 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ அமைக்கப்படும் என்று தனது சுதந்திர தின உரையில் இன்று(ஆகஸ்ட் 15)அறிவித்தார்.
78-ஆவது சுதந்திர தினமான இன்று சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து விட்டு, சுதந்திர தின உரையாற்றினார்.
பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டி, உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த தமிழ்நாட்டு மக்களைப் பற்றிப் பேசினார். தொடர்ந்து சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார்.
தேசியக் கொடியைப் பற்றிப் பேசிய ஸ்டாலின், மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலில் 1974 வருடம் பெற்றுத் தந்தவர் மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து, 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற பின், திமுக அரசு செய்த பணிகளைப் பட்டியலிட்டார். பின்னர், இனி வரும் காலங்களில் தனது அரசு செயல்படுத்த இருக்கும், திட்டங்களை அறிவித்தார்.
அதில் முக்கியமான ஒன்று தான் முதல்வர் மருந்தகம். இதைப் பற்றி “அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும், தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.
வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.” என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”பாமகவில் இருந்து தலித் முதல்வர்” : அன்புமணி ஆஃபர்!
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலக அழுத்தமா?: குஷ்பு விளக்கம்!
ஆகஸ்ட் 19… நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தயாராகும் அமைச்சர்கள்!