பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
ரூ.5,200 கோடி மதிப்பீட்டில் சென்னை விமான நிலைய புதிய முனையம், கோவை சென்னை வந்தே பாரத் ரயில், தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 2.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலைய புதிய முனையம், கோவை சென்னை வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் 20 நிமிடங்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளார்.
அதில் “சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும், விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்பு துறை நிலங்களை இலவசமாக வழங்குதல், காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்திக்கான ஊக்க சலுகை திட்டம், பி.எம்.மித்ரா பூங்காவின் முதன்மை வேட்பாளராக சிப்காட்டினை நியமித்தல், தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை சென்னையில் அமைத்தல், ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல்,
தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல், தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிப்பட்டியலில் “ன்”, “க” என முடிவடையும் பெயர்களை “ர்” விகுதியுடன் மாற்ற கோருதல், கடலோர காற்றாலை மின் உற்பத்தி பெரும்பங்கை தமிழ்நாட்டிற்கு வழங்குதல்,
சுங்க கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளை களைதல், இலங்கை தமிழர்கள் விவகாரம் – ஈழத்தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளித்திட இலங்கை அரசை வற்புறுத்துதல், பாக் வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
“தமிழக மக்களை நேசிக்கிறேன்”: பிரதமர் மோடி
நாகார்ஜுனாவுடன் இணையும் இளம் நடிகை!