தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆகஸ்ட் 16-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வந்திருந்தார்.
போட்டித் தொடக்க விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, டெல்லி சென்று பிரதமருக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தமிழக அரசு நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், தமிழக அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
உலகம் முழுவதிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நம் நாட்டினுடைய மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகுந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் முக்கிய பண்புகள் ஆகும். தொடர்ச்சியான உங்களது ஆதரவும், இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தும் வாய்ப்புகளை வழங்குமாறும் தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதுடன் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளார்.
மேலும் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு அவர்களையும் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கடற்கரை போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கோரிக்கையினையும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
கள்ளக்குறிச்சி:போலீஸுக்கு ஏன் சாதீய அணுகுமுறை? திருமாவளவன் கேள்வி!