கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மார்ச் 7) புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆறுதலாக பேசினார்.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் பரவியது. இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
போலியான வீடியோக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழகம் அரணாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு நபர் முதல்வரிடம், “திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பார்த்தேன். இங்கு அந்த பிரச்சனைகள் இல்லை.” என்றார்.
அவரிடம் பேசிய முதல்வர், “அது போலியான வீடியோ, நம்ப வேண்டாம். தமிழக அரசு எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
செல்வம்