ஆளுநர் – முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? – அமைச்சர் ரகுபதி பேட்டி!

Published On:

| By Selvam

mk stalin meets governor ravi

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று (டிசம்பர் 30) சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த விவகாரத்தில் “ஆளுநர் முதல்வருடன் அமர்ந்து தீர்வு கண்டால் பாராட்டுவோம். இதற்காக முதல்வரை ஆளுநர் அழைத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மசோதா விவகாரத்திற்கு தீர்வு காண முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு சென்றனர்.

mk stalin meets governor ravi

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று ஆளுநரை சந்தித்தோம்.

தமிழக சட்டமன்றத்தில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றில் 10 மசோதாக்களை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார். உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் அந்த 10 மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இன்றைய சந்திப்பின் போது முதல்முறையாக மசோதாக்களை திருப்பி அனுப்பியபோதே அதற்கான விவரங்களை கேட்டிருந்தால் தகுந்த விளக்கங்களை அனுப்பியிருப்போம் என்று ஆளுநரிடம் சொல்லியிருக்கிறோம்.

மீதமுள்ள 8 மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்களே கேட்டுக்கொண்டவை. அதன்படி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், சித்தா தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பியுள்ளார். ஆக 20 மசோதாக்களும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் விதிமுறை சட்ட மசோதா மட்டும் ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான விசாரணைக்கு அனுமதி கோரும் கோப்புகள் நிலுவையில் உள்ளதால் விரைந்து அனுமதியளிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டிருக்கிறோம்.

அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 112 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது.

அதில் 68 பேரின் விடுதலைக்கு அனுமதி கிடைத்துள்ளது. 2 பேரின் விடுதலையை மட்டும் ரத்து செய்து 70 கோப்புகளை எங்களுக்கு அனுப்பியுள்ளார். 49 முன்விடுதலை கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. மீதமுள்ள கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி-யில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே அதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மனுக்களாக ஆளுநரிடம் முதல்வர் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பானது சுமூகமாக நடைபெற்றது. மீண்டும் ஆளுநர் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன், “ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டி  மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். அதனை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. அதனால் நீங்களே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம் குடியரசு தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டியதில்லை என்று அவரிடம் எடுத்து கூறினோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி: எடப்பாடி நம்பிக்கை!

2023 தமிழ் சினிமா சிறப்பு பார்வை 2 : வசூலை குவித்த படங்கள் எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel