’விழுப்புரத்தில் 3.49 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை’ : ஸ்டாலின்

அரசியல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் (ஜூலை 8) பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் திமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் தீவிர இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விக்கிரவாண்டியின் பல்வேறு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேர் மாதம் ரூ.1000 நிதியுதவி பெற்று வருகின்றனர்” என்று பேசியுள்ளார். தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளது என்றும் கடும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டத்திலும் விக்கிரவாண்டி தொகுதியிலும் மூன்றாண்டுகளில் நிறைவேற்றியுள்ள முத்தான திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற தத்துவத்துடன் திராவிடமாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக வளர்ச்சி பெற்றால்தான் உடல் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக அமையும். அதுபோலத்தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சியுடன் கட்டுக்கோப்பாக இணைந்து அமைந்திட வேண்டும். அப்போதுதான் எல்லோர்க்கும் சீராக எல்லாம் கிடைத்து எல்லோரும் முன்னேற்றம் காணமுடியும். திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படையே இதுதான்.

இந்த அடிப்படையில்தான் எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்திலும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் இப்படித்தான் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலும், இந்தியாவைக் கடந்தும் புகழீட்டியுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர்.

முதல்வரின் முகவரி திட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 223 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 24 ஆயிரத்து 356 மனுக்களுக்கும், விக்கிரவாண்டியில் 21,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 29 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு, 7 ஆயிரத்து 750 பெண் தன்னார்வலர்கள் மூலம் பயன் பெறுகின்றனர். விக்கிரவாண்டியில் 328 மாணவ மாணவியர் 83 தன்னார்வலர்கள் மூலம் பயனடைகின்றனர்.

மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத் திட்டத்தில் 6 கோடியே, 92 இலட்சத்து 89 ஆயிரத்து 206 முறையும், விக்கிரவாண்டியில் 3 கோடியே 89 இலட்சத்து 96 ஆயிரத்து 648 முறையும் மகளிர் / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளும், விக்கிரவாண்டியில் 53 ஆயிரத்து 375 குடும்பத் தலைவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று மகிழ்கின்றனர்.

5 பவுன் நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தில் 90.13 கோடி ரூபாய் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 20,799 குடும்பங்களும், விக்கிரவாண்டியில் ரூ.8.50 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்களும் பயனடைந்துள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 136 பேரும், விக்கிரவாண்டியில் 80 ஆயிரத்து 929 பேரும் பயன் பெற்றுள்ளனர்.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 2 ஆயிரத்து 995 பேருக்கு 1 கோடியே 83 லட்சத்து 63 ஆயிரத்து 173 ரூபாய் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரவாண்டியில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன .

6,119 விவசாயிகளின் பம்ப் செட்களுக்கும், விக்கிரவாண்டியில் 16 கோடியே 76 லட்சம் ரூபாய்ச் செலவில் 901 விவசாயிகளின் பம்ப்செட்களுக்கும் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தில் 78 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 16 நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 61 ஆயிரத்து 283 பேர் பயனடைந்துள்ளனர். விக்கிரவாண்டியில் 6 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 4 ஆயிரத்து 621 பேர் பயனடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,624 மகளிர் சுயஉதவிக் குழுக்களில், 16 ஆயிரத்து 128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன்கள் ரத்து. பல்வேறு முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 43 ஆயிரத்து 33 பயனாளிகளுக்கு 314 கோடியே 67 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாயும், விக்கிரவாண்டி தொகுதியில் 15 ஆயிரத்து 415 பயனாளிகளுக்கு 6 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 42 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 158 மாற்றுத் திறனாளிகளுக்கு 5 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரத்து 64 ரூபாயும், விக்கிரவாண்டியில் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 785 மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கோடியே 38 இலட்சத்து 8 ஆயிரத்து 700 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் சார்பில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ் 10ஆம் வகுப்பு படித்த 1,696 ஏழைப்பெண்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.4.24 கோடி திருமண நிதியுதவியும், ரூ.6.10 கோடி மதிப்பிலான 13.568 கிலோ கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2,085 ஏழைப் பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.10.42 கோடி திருமண நிதியுதவியும், ரூ.7.50 கோடி மதிப்பிலான 16.680 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்த 9 ஆயிரத்து 488 மாணவிகளும், விக்கிரவாண்டியில் 738 மாணவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பள்ளிக் கல்வித் துறைமூலம்
19,589 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா சீருடைகள்,
10,627 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா காலணிகள்,
31,295 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா புத்தகப் பைகள்,
5,842 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா அட்லஸ்கள்,
3,610 மாணவியர்க்கு விலையில்லா கிரையான்கள்,
5,963 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா கணித உபகரணப்பெட்டிகளும்
7,017 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா வண்ண பென்சில்கள்,
15,140 மாணவ, மாணவியர்க்கு, விலையில்லா பூட்ஸ்கள்,
15,140 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா காலுறைகள் (2Socks) வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7,600 குடும்பங்களுக்கும், விக்கிரவாண்டி தொகுதியில் 20 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,354 வேளாண் குடும்பங்களுக்கும் வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் வழங்கிய 20 சதவித இடஒதுக்கீடுகளால் ஏற்பட்ட பயன் தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர்மரபினருக்கும் 1989இல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது திமுக.

20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 1988-1989 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990இல் 187 ஆக உயர்ந்தது.

இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 26 என்பது 74 ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது. இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990இல் 685 ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.

வன்னியர் தியாகிகள் குடும்பங்களுக்கு நிதியுதவி
20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, 1987-ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த 27 பேரின் குடும்பங்களுக்கு 1998இல் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது திமுக. அத்துடன், இந்த 27 சமூக நீதிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாய் அனுமதித்ததும் திமுக தான்.

அந்தக் குடும்ப ஓய்வூதியத்தை நவம்பர் 2006 முதல் மாதம் 1,500 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் திமுக தான். இந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த 12,000-த்திற்கு மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்ததும் திமுக ஆட்சித்தான். இராமசாமி படையாச்சியார் திருவுருவச்சிலை 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னை கிண்டியில் அமைத்து திறந்து வைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான்.

21 சமூக நீதிப் போராளிகள் நினைவு மண்டபம்

முதலமைச்சர் ஸ்டாலின், 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்திட ஆணையிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம்

அண்ணா,கலைஞர் ஆகியோர் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகச் சிறப்புடன் பணியாற்றிய ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் அவருடைய திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் ஒன்றை ரூ.4 (நான்கு) கோடி மதிப்பீட்டில் அமைத்திட ஆணையிட்டு வன்னிய சமுதாயத்திற்குச் சிறப்புகள் செய்கிறார்கள்.

இப்படி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டு சிறந்த மாநிலமாகத் திகழ்வதுபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’வேங்கைவயல்.. 2 ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?’ : உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *