இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து செய்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் 5,300 ஆண்டுகளுக்கு முன்பாக இரும்பின் காலம் தொடங்கியது. இந்த பகுப்பாய்வு முடிவுகள் வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் பகுப்பாய்வு முடிவுகளை பாராட்டி தங்கள் கருத்துக்களை சொன்னார்கள். இவை அனைத்தையும் தொகுத்து தான் இரும்பின் தொன்மை என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகத்தில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு 6-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது என்று கீழடி அகழாய்வு முடிவுகள் சொல்கிறது.
பொருநை ஆற்றங்கரையில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என்று சிவகளை ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இத்தகைய அகழாய்வு முடிவுகள் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய துணை கண்டத்திற்கே திருப்புமுனையாக அமைந்து வருகிறது.
தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து இதுவரை நாம் சொல்லி வந்தது, இலக்கிய புனைவுகளோ அரசியலுக்காகவோ அல்ல, இவை அனைத்தும் வரலாற்று ஆதாரங்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.