தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 27) சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை குறித்து இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“தாய் வழி சமூகம் தான் மனித குலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது. பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்கள் கல்வி மறுக்கப்பட்டது. ஒரு ஆணின் வெற்றிக்காகவும் தங்களது குழந்தைகளுக்காகவும் வீட்டிலும் வெளியிலும் அவர்கள் உழைத்த நேரத்தை கணக்கிட்டிருந்தால் இந்நேரம் நம் நாட்டில் குடும்ப சொத்துக்கள் அனைத்திலும் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றாமல் இடம்பெற்றிருக்கும்.
கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க தான் மகளிர் உரிமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அங்கீகரித்தால் பெண்களுக்கான சம உரிமை வழங்கிடும் நிலை உருவாகிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது. எனவே தான் இந்த திட்டத்திற்கு மகளிர் உதவித்தொகை என்றில்லாமல் மகளிர் உரிமைத்தொகை என்று கவனமாக பெயரிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை திட்டத்திற்காக ரூ.7000 கோடி இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பகிர்தல் அறம் என்றும் பசித்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்றும் தமிழ் மரபின் தாக்கத்தால் தேவையானவர்களுக்கு தேவையான உதவி உரிய நேரத்தில் தேடித்தேடி வழங்கப்படும். அனைவருக்கும் வீடு என்று அறிவித்தால் வீடு இல்லாதவர்களுக்கு கனவு வீடு அமைத்து தருவது என்று தான் பொருள்.
அந்தவகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய மாதம் ரூ.1000 என்பது தேவைப்படும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ பெண்கள், கட்டுமான தொழில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
ஏறத்தாழ 1 கோடி குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மாலையில் ’ஸ்நாக்ஸ்’
ராகுல் தகுதி நீக்கம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
