பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்குமாறு கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், சிவகாசியைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்குமாறு கோரி,
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும் கோரி, 13-10-2021 அன்று, கெஜ்ரிவாலுக்கு தாம் எழுதியிருந்த கடிதத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர்,
பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர்,
ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு,
உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்காதபோது தில்லியில் தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், இந்தத் தடையை மாண்புமிகு டெல்லி முதல்வர் நீக்குவதன் மூலமாக,
தமிழ்நாட்டில், சிவகாசியைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலை நம்பியிருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட இயலும் எனக் குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்குமாறு முதல்வர் கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பாஜகவை காட்டி பயமுறுத்தக் கூடாது: தொனி மாறும் தினகரன்
திமுக ஆட்சியில் அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை: கடலூர் கமிஷனர்