பெரியார் உலக மக்களுக்கான தலைவர் : முதல்வர் ஸ்டாலின்
பெரியார் பிறந்தநாளை கடந்த வருடம் சமூகநீதி நாளாக அறிவித்தது திமுக அரசுக்கு கிடைத்த பெருமை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள ’பெரியார் உலகம்’ கட்டிடத்திற்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 17) அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழா சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய தாய் வீடான பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன்.
திராவிடர் கழகத்திற்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல. தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்த திடல் செயலாற்றி கொண்டிருக்கிறது.
சமூகநீதி காவலர் வி.பி.சிங் தொடங்கி தேசிய தலைவர்கள் பலரும் சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை ஆகியவற்றின் தலைமையிடமாக இருக்கும் பெரியார் திடலுக்கு வருகை தந்துள்ளனர்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கு சமூக நீதியின் தலைமையிடமாக பெரியார் திடல் திகழ்கிறது.
தந்தை பெரியார் அவர்களை உலகத் தலைவராக உயர்த்தி காட்டவே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘பெரியார் உலகம்’ என்பதை தொடங்கியிருக்கிறார்.
பெரியாரின் தொண்டனாக 10 வயதில் தொடங்கி தற்போது 90 வயதாகியும் சுறுசுறுப்பாக செயலாற்றி வருகிறார்.
பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை எண்ணி மகிழ்கிறேன்.
இதன்மூலம் பெரியார் கொள்கைகள் வாழும் காலமெல்லாம், என் பெயரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இப்போதே பெருமைப்படுகிறேன்.
பெரியார் பிறந்தநாளை கடந்த வருடம் சமூகநீதி நாளாக அறிவித்தது அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை மட்டும் அல்ல. திமுக அரசுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை.
உலகின் பலகோடி மக்கள், பத்தறிவு இயக்கங்கள், சமூக நீதி செயற்பாட்டாளர்கள், பெண்ணுரிமை போராளிகள் பலரும் பெரியாரை படித்து கொண்டிருக்கிறார்கள். பெரியார் இந்தியாவுக்கான தலைவர் மட்டுமல்ல, அவர் உலக மக்களுக்கான தலைவராக உள்ளார்.
தமிழ் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்பையும், உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கி தரும் பணியை திமுக அரசு செய்யும். இதுவே தந்தை பெரியாரின் நான் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
குழந்தைகளுக்குக் காய்ச்சல்: இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!