திமுக பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
” அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா!
முப்பெரும் விழா எனும் திமுகவின் பவள விழாவை கடந்த செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த இயக்கத்தை உருவாக்கிய அண்ணாவை நமக்குத் தந்த காஞ்சிபுரம் மண்ணில் மற்றொரு விழாவுக்கு உங்களை அழைக்கிறேன்.
தமிழ் – தமிழர் – தமிழ்நாடு என்று திமுக முழக்கத்தை வைத்தபோது, அது குறுகிய கண்ணோட்டம் என்று கருதியவர்கள் உண்டு.
ஆனால், இன்று மொழி – இனம் – மாநில உரிமை என்று அந்த முழக்கம் விரிவான பொருளைத் தருவதுடன், தமிழ்நாட்டைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதே பன்முகத்தன்மையும் மதநல்லிணக்கமும் கொண்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை அனைத்து மாநில மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். இதுதான் 75 ஆண்டுகால திமுகவின் இந்திய அளவிலான தாக்கம்.
இதனை எடுத்துச் சொல்ல ஒரு பவள விழா போதாது. திசையெங்கும் விழா எடுக்க வேண்டும். திமுகவுடன் இணைந்து கொள்கைக் கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால்தான் செப்டம்பர் 28-ஆம் நாள், அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது.
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு!
சென்னை நந்தனம் விழா நம் குடும்ப விழா என்பதால் திமுகவினருக்கு முழுமையான நேரம் ஒதுக்கப்பட்டது. காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா. இங்கே தோழமைக் கட்சியினர் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாப் பொதுக்கூட்டத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகளை இரவு – பகல் பாராது மேற்கொண்டு வருகிறார்கள்.
அண்ணாவிடமும் கலைஞரிடமும் கொள்கைப் பாடம் பயின்ற திமுகவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற பவள விழாவில் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவுடன் தோழமை உறவு கொண்டுள்ள ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் பவள விழாக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். உங்களில் ஒருவனான நான் சிறப்புரை ஆற்றவிருக்கிறேன்.
டெல்லியில் பிரதமரை சந்திக்கிறேன்!
காஞ்சி மண்ணில் நடைபெறும் பவள விழா ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்டறிந்து வருகிறேன். ‘மக்களிடம் செல்’ என்று திமுகவை உருவாக்கிய அண்ணா சொன்னதைக் கட்டளையாக ஏற்று திமுக அரசு மக்களுக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறது. அதனால் அரசு சார்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுகள், ஆய்வுப் பணிகள் எனத் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஓய்வில்லை.
மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே திமுகவின் வலிமை.
ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன்.
செப்டம்பர் 28-ஆம் தேதி காலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாயில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு டாடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் திமுக அரசின் கொள்கைகள் இன்று இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை நிகழ்வினை முடித்துக்கொண்டு, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய அண்ணாவின் காஞ்சிக்கு வருகிறேன்.
நான் மட்டுமல்ல, நம் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம். கொள்கைத் தோழமைகளுடன் கொண்டாடுவோம் கழகத்தின் பவள விழாவை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பரிதாபங்கள் சேனலில் திருப்பதி லட்டு வீடியோ… வருத்தம் தெரிவித்த கோபி, சுதாகர்
“களரி பயிற்சிக்கு குமரியில் தனி ஆராய்ச்சி மையம்” – மனோ தங்கராஜ் தகவல்!