ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 28) தொடங்கி வைத்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நினைவு நூலக அரங்கில் ’ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களின் தொடக்கவிழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஏற்றமிகு 7 திட்டங்கள்
தொடர்ந்து விழாவில் அவர் பேசுகையில், “ ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ், முக்கிய பலத்திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
சமூக நலத்துறை மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்,
திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையான ரூ.1500 உயர்த்தி வழங்கும் திட்டம்,
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மேலும் மாநிலத்தின் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம்,
நகராட்சி நிர்வாகத் துறை மூலம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்,
மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா,
சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா,
பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.” என்றார்.
236 கோடி இலவச பயணங்கள்
மேலும் அவர், ”ஏற்றமிகு ஏழு திட்டங்கள் விழா நடைபெறும் இடத்தை எண்ணி பார்க்கும் போது அண்ணா பெயர் கொண்ட இந்த நூலகத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் உணர்ச்சியும் மகிழ்சியும் அடைகிறேன்.
இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறோம். மகளிர் இலவச பேருந்தால் திமுக ஆட்சிக்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய திருச்சி மாநாட்டில் 7 முக்கிய உறுதிமொழிகளை முன்வைத்தேன். ஆட்சி பொறுப்பேற்று கோட்டையில் என் முதல் கையெழுத்தான மகளிர் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் இதுவரை 236 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
17 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பயிற்சி
புதிய தொழில் நிறுவனங்களில் பணியாற்ற திறமையானவர்கள் இல்லை என தொழிலதிபர்கள் சிலர் கூறினர். இதற்கு தீர்வாக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக நான் முதல்வன் திட்டத்தை கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி வைத்தேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களை உலகின் முதன்மையானவர்களாக ஆக்குவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் அரசு சார்பில் 17 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் பணி
தொடர்ந்து தனது பிறந்தநாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர், “நாளை எனது 70வது பிறந்தநாள், இதில் 55 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் அரசியலையும் என் வாழ்க்கையாகவே நினைத்து வருகிறேன்.
அரசியலை கடமையாகவும், தொண்டாகவும், சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர்.
அவர்களின் வழியிலேயே நான் இப்போது பணியாற்றி வருகிறேன் என்பதில் பெருமையடைகிறேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிஃபா விருது: ரொனோல்டோவின் பல சாதனைகளை முறியடித்த மெஸ்ஸி
மதுரையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு!
உருட்டு மன்னனின் உளறல்கள்