அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 9) கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “நான் இங்கு வருவதற்கு முன்பு நேற்று (ஆகஸ்ட் 8) இரவே உங்கள் வங்கி கணக்கிற்கு மாதம் ரூ.1000 வரவு வைக்க உத்தரவு போட்டுவிட்டேன்.
நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வந்தாலும், ஒருசில திட்டங்கள் தான் நமது மனதிற்கு மிக நெருக்கமான திட்டமாக இருக்கும். வரலாற்றில் நமது பெயரை சொல்லப்போகிற திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக உருவாகியிருக்கிற தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பெரும் மகிழ்ச்சியோடு கோவைக்கு வந்திருக்கிறேன்.
இந்த திட்டத்தை தொடங்கி வைக்க நான் தேர்ந்தெடுத்தது கோவை மண்டலம். ஏனென்றால் இது அன்பான, பாசமான, சேவை மனப்பான்மை உள்ள மக்கள் வசிக்கும் பகுதி. தொழில்துறையில் சிறந்த மண்டலம் இது. விருந்தோம்பல் உள்ளிட்ட நற்பண்புகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னோடி என்று சொல்லும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் என்ற சொன்னாலே அது சமூக நீதிக்கான அரசு.
புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் மட்டும் பயன்பெறுகிறார்களே எங்களுக்கு கிடையாதா என்று ஆண் மாணவர்கள் கேட்டார்கள். அந்த கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்டது தான் தமிழ்ப் புதல்வன் திட்டம்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கப்போகும் மாணவர்களுக்கு இனி மாதம் மாதம் ரூ.1000 வழங்கப் போகிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கிற ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது!
மதுபான ஊழல் வழக்கு: மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!