காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வடகால் கிராமத்தில் சிப்காட் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தோடு இணைந்து பெண் பணியாளர்களுக்கான தங்குமிட குடியிருப்பு வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஃபாக்ஸ்கான் குழும தலைவர் யாங் லீயு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,
“உலகளாவிய நிறுவனமாக இருந்தாலும் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் சிறப்பான இந்தியச் செயல்பாடுகளுக்காக அதன் தலைவர் யாங் லீயு அவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதற்காக, யாங் லீயு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல சிறப்புகளை, பெருமைகளை பெற வேண்டும் அதற்காக வாழ்த்துகிறேன்.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான், உலகத்திலேயே மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனம். உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை பொருத்தி ஒருங்கிணைக்கும் நிறுவனம் இது.
12 நாடுகளில் தன்னுடைய உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருக்கிறது. இந்தக் குழுமம் தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் இரண்டு உற்பத்தி அலகுகளை நிறுவி இருப்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை.
இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 41 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதில் 35 ஆயிரம் பேர் பெண்கள்.
ஆணுக்கு பெண் சமம் என்பதை தாண்டி ஆண்களைவிட, கூடுதலான பெண் தொழிலாளர்கள் இருப்பதை பெண் எனும் பேராற்றலுக்குத் தரும் முக்கியத்துவமாகவே பார்க்கிறேன். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும்விட, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 42 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது.
அந்த வகையில், உங்கள் பெண்களின் நிறுவனத்தின் சமத்துவ நோக்கத்தை பாராட்டுகிறேன். வளர்ச்சிக்காக தமிழ்நாடு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எடுத்துக்காட்டாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’, அது மட்டுமல்லாமல், இன்னும் பல புதுமையான திட்டங்களை பெண்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வருகிறது.
பணிக்கு செல்லும் தாய்மார்களின் நலன் கருதி, சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
மேலும், சிப்காட் நிறுவனம் நேரடியாக குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்த முடிவெடுத்து இருக்கிறது. அதை பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க, இளம் வயதிலேயே வகையில், ஊக்குவிக்கும் அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்காக, உலக வங்கி உ உதவியோடு தமிழ்நாடு அரசு “WE SAFE” திட்டத்தை தொடங்கி, பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறது.
நம்முடைய திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று இலட்சிய இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதில் வெற்றியும் பெற்று வருகிறோம். நிதி ஆயோக் அமைப்பின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது.
பத்து குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 13 குறியீடுகளில் தமிழ்நாடு 11-ல் தேசிய சராசரியைவிட அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது. 2023-2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 விழுக்காடு பங்களிப்போடு தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
இந்தியாவிலேயே பன்முகத்தன்மையோடு தொழில் துறைக்கு சாதகமான எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நம்முடைய மாநிலத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கிறது. இதனால், உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம் உருவாக்கப்படுகிறது.
இன்றைய தினம், சிப்காட் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தோடு இணைந்து திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் வடகால் கிராமத்தில் அமைத்திருக்கும் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான தங்குமிட வசதியை திறந்து வைத்திருக்கிறேன்.
706 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது அமைந்திருக்கிறது. 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்டதாக இது இருக்கிறது. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடித் திட்டம் இந்த திட்டம். தொழில் வளர்ச்சி மூலமாகத்தான் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரமும் விரைவான வளர்ச்சி பெறும்.
அதனால்தான் தொழில் வளர்ச்சியில் நாங்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். 2021-ல் நம்முடைய அரசு பொறுப்பேற்றது முதல், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடங்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
2030-ஆம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள், அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம் என்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
அதற்கு ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொண்டு, மீண்டும் ‘பத்ம பூஷன்’ விருது பெற்றுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு அவர்களை மனதார பாராட்டி, விடைபெறுகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன் – சுவாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
கலைஞர் நாணய வெளியீட்டு விழா… ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி பதிவு!