காலை உணவு திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திருவள்ளூரில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1,14,000 மாணவர்கள் பயன்பெற்றனர். இந்தநிலையில், 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 அரசு பள்ளிகளில் படிக்கும் 18,50,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

இதனை தொடர்ந்து அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவிகளுடன் அமர்ந்து ஸ்டாலின் காலை உணவை உட்கொண்டார். மாணவிகளிடம் பேச்சு கொடுத்தபடியே, அவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.

இதே போல ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடைதிறப்பு!

’ஃபயர்’ படம்…. ரச்சிதாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா? இயக்குனர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel