அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார்.
மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி இன்று காலை மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அங்குள்ள சமையல் கூடத்தை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவை எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வந்த முதல்வர் அங்குள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை பறிமாறினார்.
பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திய அவர், அருகில் இருந்த இரு மாணவர்களுக்கு உணவினை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது” என்று அறிவித்தார்.
மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இன்று மதுரையில் துவக்கிவைக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை : அப்பாவிடம் உதயநிதி கொடுத்த மா.செ.க்கள் பட்டியல்!