கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளை (ஜூன் 20) நடைபெறுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் சென்றார்.
திருவாரூர் அருகே காட்டூரில் தாயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பின்னர் கலைஞர் கோட்டத்தைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து முத்துவேல் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க உள்ளார்.
இந்த திறப்பு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்கப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் சாலை மார்கமாக திருவாரூர் சென்றார். அங்கு கொட்டும் மழையிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
நாளை பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் விமானம் மூலம் திருச்சி வருகின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காட்டூர் வருகின்றனர். இதற்காக வா.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் விழாவிற்கான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க திருவாரூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் பொதுக்கூட்ட பந்தல் மேடை ஆகியவற்றை முதலமைச்சர் இன்று நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
மோனிஷா
பயன்பாட்டுக்கு வராமலேயே மூன்று சுகாதார வளாகங்கள் சேதம்!
உத்தரப்பிரதேசம், பீகார் வெயில்: 98 பேர் பலி!