ராஜன் குறை
மக்களாட்சி நடைமுறைகளெல்லாம் உருவான பிறகும் மேற்கத்திய நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை என்பது பலரும் மனதில் கொள்ளாத செய்தியாக இருக்கலாம். பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் கேட்டு பல இயக்கங்கள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஐரோப்பிய நாடுகளிலும் நடந்தன. இதனை சஃப்ரேஜ் மூவ்மென்ட் (Suffrage Movement) வாக்குரிமை இயக்கம் என்று அழைப்பார்கள். முதல் உலகப் போருக்குப் பின்னர்தான் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிதான் உலகையே உலுக்கி மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சிக்கு வித்திட்ட து என்றாலும் அந்த நாட்டில் மகளிருக்கு வாக்குரிமை 1944ஆம் ஆண்டுதான் வழங்கப்பட்டது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற புரட்சிகர முழக்கத்தில் சகோதரிகளுக்கு இடமிருக்கவில்லை என்பதை பல பெண்ணிய சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இது பல வடிவங்களில் பெண்களை ஆண்களைச் சார்ந்தவர்களாக வைத்திருந்தது. உயர்கல்வி கற்கும் உரிமை பல நாடுகளில் மறுக்கப்பட்டிருந்தது. இப்படி எவ்வளவோ சொல்லலாம்.
உலக நாடுகளில் பெண்கள் உரிமைகளுக்காக நடந்து வந்த இயக்கங்களின் குரல்களையெல்லாம் விட தீவிரமாக பெண்களுக்காக ஒலித்த குரல் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. அதுதான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் குரல். உதாரணமாக 1928ஆம் ஆண்டு, 95 ஆண்டுகளுக்கு முன், நவம்பர் 26ஆம் நாள் சென்னையிலே நடந்த தென்னிந்திய சீர்திருத்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தலைமை வகித்து உரையாற்றினார் பெரியார். அந்த உரை “சீர்திருத்தம்” என்ற பெயரிலே சுயமரியாதை பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதை பெரியார் பிறந்த தினமான நேற்றைய தினம் வி.சி.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் முகநூலில் பகிர்ந்திருந்தார். அதில் பெரியார் கூறுகிறார்: “பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்பவர்களைவிட மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு’ என்பது போலவும், ‘பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு’ என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக் கருதி நட த்தப்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் நீதி ஏற்படுத்தியிருப்பாரானால் முதலிலே அந்த கடவுளை ஒழித்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.” இவ்வாறு தனக்கேயுரிய வகையில் பெண்களின் நிலை குறித்த கோபத்தை வெளிப்படுத்தினார் பெரியார்.
இந்த நீண்ட வரலாற்றுப் பின்னணியை மனதிலே கொண்டு பார்க்கும்போதுதான் மகளிரின் சமூக உரிமைகளை மேம்படுத்துவதில் சாதனைகள் படைத்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சிறப்பு புலப்படும்.
மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம்
ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடனேயே முதலில் நிறைவேற்றிய திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் என்பதுதான். உழைக்கும் மக்களின் குடும்பச் சூழலில் பெண்களின் வருமானமே குடும்பத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. அதில் அவர்கள் தினசரி பணிக்குச் சென்று வரும் போக்குவரத்து செலவு என்பது அவர்கள் வருவாயில் ஒரு பகுதியைக் கோருவது.
அந்தத் தொகையை மீதப்படுத்துவது என்பதைவிட, அவர்கள் உழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகவே இந்தத் திட்டம் அமைந்தது. குடும்பத்துக்கு வருவாய் ஈட்டுவதுடன், பெரும்பாலும் குடும்ப நிர்வாகத்திலும், பிள்ளைகளை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுவதன் மூலம் சமூகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யும் மகளிருக்கு சமூகம் செய்யும் குறைந்தபட்ச மரியாதைதானே அவர்கள் பயணச்செலவைக் குறைப்பது? இந்தத் திட்ட த்தின் மூலம் பெண்களுக்கு பொதுவெளியில் பெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது தி.மு.க அரசு.
மகளிர் உரிமைத் தொகை என்ற புரட்சிகர திட்டம்!
ஆட்சிக்கு வந்தவுடனேயே நிறைவேற்றிய வாக்குறுதி கட்டணமில்லா பயணம் என்றால், இரண்டாண்டுகள் கழித்து நிறைவேற்றிய வாக்குறுதி மிகவும் புரட்சிகரமானது. அது தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளின் உரிமைத் தொகை என்ற திட்டமாகும். ஏன் இரண்டாண்டு தாமதம் என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
மாதம் ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகும் ஒரு திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த எப்படிப்பட்ட அரசியல் விருப்புறுதி வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும். இது ஏதோ ஒரு மாதம் கொடுத்துவிட்டு நிறுத்தக்கூடிய திட்டமல்ல. நிரந்தரமாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்.
இது போன்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றியது மட்டும் அரிய விஷயமல்ல. அதற்கு மகளிர் உரிமைத் தொகை என்று பெயரிடப்பட்டிருப்பதுதான் முக்கியமானது. அது என்ன உரிமை? யாரிடம் கொள்ளும் உரிமை? என்று கேட்கும்போதுதான் சில முக்கியமான மானுடவியல் உண்மைகள் வெளிவரும். அது என்னவென்றால் காலம் காலமாக மறுக்கப்பட்ட பெண்களின் இல்லப்பணியின் மதிப்பு.
இதில் அடங்கியுள்ள தத்துவப் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, அன்றாட பேச்சு வழக்கில் நாம் எப்படிக் கூறி பழகியுள்ளோம்? ஒருவர் கேட்பார் “உங்கள் மனைவி வேலைக்குப் போகிறாரா?” அதற்கு இவர் பதில் சொல்வார்: “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்.” வீட்டில் ஒரு பெண் சும்மா இருப்பது சாத்தியமா? உண்மையில் சொல்லப்போனால் அலுவலகத்திலோ, தொழிற்சாலையோ ஆண் செய்யும் வேலையைவிட அதிக வேலையை பெண் வீட்டில் செய்வார். மூன்று வேளை உணவு சமைப்பது, முதியோரை கவனிப்பது, குழந்தைகளை பள்ளிக்குத் தயார் செய்து அனுப்புவது, அவர்கள் படிப்பை மேற்பார்வையிடுவது என அனைத்தையும் செய்வார்.
வீட்டில் இருந்தாலும், வேலைக்குச் சென்றாலும், இல்லப் பராமரிப்பில் பெண்களின் பங்களிப்புதான் கணிசமாக இருப்பதைக் காணலாம். குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதிலும் அவர்கள் பொறுப்பு மிகவும் அதிகமானது, தனித்துவமிக்கது. அதனால் அவர்களை ஆண்களுக்கு சமமானவர்கள் என்று கூறுவதும் தவறு, ஆண்களை விட சமூக வாழ்க்கைக்கு அதிக பங்களிப்பு செய்பவர்கள் என்று கூற வேண்டும். அதனால்தான் இது மகளிர் உரிமைத் தொகை.
உடனே ஒரு சில விதண்டாவாதிகள் உரிமைத் தொகையென்றால் அனைத்து மகளிருக்கும் தர வேண்டாமா? அதென்ன தகுதியுள்ள மகளிர் என்று கேட்கிறார்கள். மகளிர் உரிமையின் மதிப்பு என்ன என்பதை அளவிட முடியாது. அரசாங்கத்தால் எந்த அளவு தர முடியும் என்பதற்கும் எல்லை உள்ளது. அந்த நிலையில் இந்த உரிமைத் தொகைக்கு ஒருவருக்கு தேவை இருக்கிறதா என்பதையும் மதிப்பிடுவது அவசியமாகிறது. மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டுபவருக்கு ஆயிரம் ரூபாயை அரசு தருவது அவசியமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
பெண்கள் இயக்கங்களிலும் இந்தக் கேள்விகள் உண்டு. எல்லா பெண்களும் ஒடுக்கப்படுவார்கள் என்றாலும், உயர் வர்க்கப் பெண்களுக்கும் உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளது. அதேபோல ஆதிக்க ஜாதி பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட ஜாதி பெண்களுக்கும் வேறுபாடு உள்ளது. இதை ஊடுபாவான தன்மை, ‘Intersectionality’ என்று கூறுவார்கள். அந்த வகையில்தான் எல்லா பெண்களுக்கும் உரிமை இருந்தாலும், தேவை இல்லாத பெண்களைத் தவிர்த்து பிறருக்கு தருவதுதான் சரியான முடிவு. ஏனெனில் அரசு தரக்கூடிய பணம் என்பது சமூகம் தரக்கூடிய பணம். அது தகுதியுள்ளவருக்குத்தான் சென்று சேர வேண்டும். இங்கே தகுதி என்பது உரிமையுடன் கூடிய தேவைதான்.
முழுப் புரட்சி: கரு சுமப்பவர்கள் கருவறைக்குள் நுழைகிறார்கள்!
பெண்கள் கருவை பத்து மாதங்கள் தங்கள் கருப்பையில் சுமக்காமல் ஒருவரும் பிறக்கவே முடியாது. ஆனால் அப்படிச் செய்பவர்களை தாய் என்றும், தெய்வம் என்றும் ஒருபுறம் கூறுவதும், மறுபுறம் அவர்களை “தீட்டு” என்று விலக்குவதும் மானுடவியலின் மிகப்பெரிய புதிர்களில் ஒன்று.
கருக்கொள்ளும் பொருட்டுதான் ஒவ்வொரு மாதமும் பெண் உடலில் சூலறை உருவாகிறது. கருக்கொள்ளவில்லையென்றால் அது சிதைந்து ரத்தமாக வெளியேறுகிறது. அதை மாத விடாய் என்று கூறுவார்கள். இதை பகுத்தறிவற்ற காலத்தில் மானுட சமூகம் ஒரு புதிராகக் கருதியிருக்கலாம். தீட்டு போன்ற எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் அறிவியல் வளர்ந்த காலத்தில் இயற்கையின் இயல்பான சாதாரண உடலியல் நிகழ்வாகத்தான் இதைப் பார்க்க முடியும்.
ஆனால் இந்தக் காலத்திலும் அறிவிலும், கல்வியிலும் சிறந்தவர்களாக தம்மை காட்டிக்கொள்ளும் பார்ப்பன சமூகத்தில் பெண்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அவர்கள் தீட்டு என்று கருதப்படுவார்கள். சமையலறைக்குள்ளோ, பூஜையறைக்குள்ளோ அவர்கள் போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பார்கள். கேட்டால் கலாச்சாரம், சனாதனம் என்று கூறுவார்கள்.
இந்த மனப்போக்கின் நீட்சியாகவே, சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் வீட்டில் பெண்கள் விலக்கானால் அவர்கள் வேறு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகிறது. மாலை போட்ட ஆண்கள் முன்னால் அவர்கள் வரக்கூடாதாம். ஏனெனில் அய்யப்பனுக்கு ஆகாதாம். அதனால்தான் பூப்படைந்த பெண்கள், மாதவிடாய் நிற்கும் வரை சபரிமலைக்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கியும், இன்று வரை அவர்களை அனுமதிக்கவில்லை. மீண்டும் வழக்கு விசாரணையில் உள்ளது.
எதனால் இதைக்குறித்து விரிவாகக் கூறுகிறேன் என்றால், பெண்கள் ஏன் அர்ச்சகர்களாக, பூசாரிகளாக கோயில்களில் பூஜை செய்யக் கூடாது, கருவறைக்குள் நுழையக் கூடாது என்றால் பலரும் கூறும் பதில் கருவறையில் இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டால் கருவறை தீட்டுப்பட்டுவிடும் என்பதுதான்.
மனிதர்கள் பிறப்பதற்கு இன்றியமையாத ஓர் உடலியல் நிகழ்வு எப்படி தீட்டாக இருக்க முடியும்? புனிதமாகத்தானே இருக்க முடியும்? இப்படிப்பட்ட மூடச் சிந்தனைகளைக் கடைப்பிடிப்பதில்தான் பெண்ணடிமைத்தனத்தின் ரகசியம் அடங்கியுள்ளது. இது போன்ற பத்தாம்பசலி பழக்கங்களெல்லாம்தான் கலாச்சாரம், பண்பாடு, சனாதனம் என்று கொண்டாடப்படுகின்றன.
இந்தப் பின்புலத்தில்தான் பெண்களும் அர்ச்சகராகத் தகுதி பெற்றிருக்கும் புரட்சிகர செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும். ஆண்களை விட எல்லா வகையிலும் கருவறையில் நுழைய தகுதி பெற்றவர்கள் பெண்களே. ஏனென்றால் உயிரியல் அடிப்படையில் அவர்களே நடமாடும் கருவறைகள்.
இத்தனை நாள் கோயில் கருவறைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்கள் கோயில் கருவறைக்குள் நுழைவது பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தின் மற்றொரு மகத்தான மைல்கல் என்று கூறலாம்.
ஒரு வகையில் கூறினால் கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத்தொகை ஆகிய இரண்டையும் விட புரட்சிகரமானது பெண்கள் அர்ச்சகராகும் தருணம்.
ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மகளிர் சமூகத்தின் பொற்கால ஆட்சியே முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்று கூற வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]