எஸ்.வி.சேகர் வைத்த கோரிக்கை… உடனடியாக நிறைவேற்றிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

தனது தந்தை வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய தெருவிற்கு அவருடைய பெயரை வைக்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் எஸ்.வி.சேகர் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து எஸ்.வி.சேகர் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில்நேற்று (ஜனவரி 20) நடைபெற்ற நாடகப்பிரியா குழுவின் 50ஆம் ஆண்டு விழா மற்றும் நாடகப்பிரியாவின் 7000-வது நாடக விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,

நாடக விழாவுக்கு அதிகமாக போவதில்லை!

எஸ்.வி.சேகர் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, என்னைப் பார்க்கவேண்டும் என்று என்னிடத்தில் தேதி கேட்டு, அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

அங்கே என்னிடத்தில் ஒரு கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்று சொல்லமாட்டேன், ஒரு உத்தரவை என்னிடத்தில் வைத்தார். என்னவென்று கேட்டால், ஏழாயிரமாவது நாடகத்தை உங்கள் தலைமையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். என்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு விழாவை அந்த நிகழ்ச்சியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். என்னுடைய நாடகக் குழுவினர் அத்தனை பேருக்கும் நீங்கள் கேடயம் வழங்கிடவேண்டும். நீங்கள் வந்து பேசக்கூட வேண்டாம். 10 நிமிடம் நாடகத்தைப் பார்த்துவிட்டு, கேடயம், பரிசுகளை மாத்திரம் வழங்கிவிட்டு போனால் போதும் என்றுதான் என்னிடத்தில் சொன்னார்.

நான் உடனே சொன்னேன், நான் முதலமைச்சரான பிறகு இது போன்ற நாடக விழாக்கள், தனிப்பட்ட முறையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு நான் அதிகமாக போவதில்லை. அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி இப்படிதான் நான் போகவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கே நேரம் போதவில்லை.

ஏனென்றால், ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டால், அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை தவிர்க்க முடியாமல் போய்விடும் என்று நான் அவரிடத்தில் சொன்னபோது, இல்லை, இல்லை நீங்கள் கட்டாயமாக வந்துதான் தீரவேண்டும் என்று உத்தரவு போட்டார்.

எஸ்.வி.சேகர் விழாவில் கலந்து கொள்வதில் ஆச்சரியப்பட வேண்டாம்!

அவர் உத்தரவை என்னால் மீறமுடியவில்லை. அதனால்தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு நான் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன். நன்றியோடு வந்திருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும், இப்போது எந்தக் கட்சி என்று தெரியாது. நம்ம கட்சி. ஏனென்றால், கலைஞர் சொல்வார், நான் என்றால் உதடு ஒட்டாது. நாம் என்றால் தான் உதடுகள் ஒட்டும். அதனால்தான் இன்றைக்கு நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்.

எஸ்.வி.சேகர் தன்னுடைய தந்தையாரைப் போலவே. கலையுலகச் சேவை ஆற்றியவர், ஆற்றிக் கொண்டிருக்கக்கூடியவர். தொடர்ந்து ஆற்றப்போகிறவர். அதனால்தான், இன்றைக்கு அவரை வாழ்த்த நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம்.

எஸ்.வி.சேகர் விழாவில் இந்த ஸ்டாலின் கலந்து கொள்வதில் யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. யாரும் வியப்படையவும் தேவையில்லை. எஸ்.வி.சேகரை பொறுத்தவரைக்கும், இதுவரை 25 நாடகங்கள் எழுதி, அவற்றை ஏழாயிரம் முறை அரங்கேற்றி இருக்கிறார். இன்றைக்கு ஏழாயிரமாவது நாடக விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னால், மூவாயிரத்தி ஐந்நூறாவது நாடக விழாவையும், அதற்குப் பிறகு 5 ஆயிரத்தி 600-வது நாடக விழாவையும் கலைஞரை அழைத்துத்தான் அவர் நடத்தியிருக்கிறார். இன்றைக்கு ஏழாயிரமாவது நாடகத்தை அவருடைய மகன் ஸ்டாலினை அழைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

கலைஞர் மீதும், என் மீதும் அளவு கடந்த பாசமுடையவர் எஸ்.வி.சேகர். பாசம் என்றால், அது அரசியல் பாசம் அல்ல, கலைப் பாசம். அதுதான் முக்கியம்.

இந்தக் கலைப் பாசம் காலத்தால் அழியாதது. அழிக்க முடியவே முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எஸ்.வி.சேகர் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் தான்.

கலைஞர் மேல் பற்றும் பாசமும் உண்டு!

எங்கள் குடும்பம் என்றால் கலைக் குடும்பம். அவர் நடத்திய நாடகத்தின் தலைப்பு அதிர்ஷ்டக்காரன். இப்போது மூன்றாவது முறையாக விழா நடத்தி ஹாட்ரிக் அடித்த அதிர்ஷ்டக்காரன் அவர். அவருக்கு அதிர்ஷ்டத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதைபோல என்னைப் பொறுத்தவரைக்கும் உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு; இங்கு பேசும்போது அவரே சொன்னார்.

கலைஞர் மேல் எஸ்.வி.சேகருக்கு மதிப்புண்டு, பாசமுண்டு, பற்றுண்டு. அதேபோல, எஸ்.வி.சேகர் மீது கலைஞருக்கும் பற்றுண்டு, பாசமுண்டு, மதிப்புண்டு. ஏனென்றால், பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். அவர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அப்பாயிண்ட்மென்ட் ஏற்கனவே கொடுத்து காத்திருக்கிறவர்களை எல்லாம் உட்கார வைத்துவிட்டு, எஸ்.வி.சேகர் வந்துவிட்டார் என்றால் அவரை தான் அழைத்துப் பேசுவார்.

அதேபோல, சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் போது கூட, அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவர் பெட்டிஷனையோ, மனுவையோ கொண்டு வந்து கலைஞரிடத்தில் வழங்கும்போது, அதை புன்சிரிப்போடு வாங்கிக்கொண்டு உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து, அதை உடனே செய்து கொடுங்கள். அதை என்னவென்று பாருங்கள் என்று உத்தரவிடுவார். அந்த நேரத்தில் எங்களுக்கெல்லாம் கோபம் வரும். காரணம், அந்த அளவிற்கு பற்றும், பாசமும் அவர்மேல் உண்டு.

இன்றைக்கு கலைஞர் நம்மோடு இல்லை என்று சொன்னாலும், அவர் மீதான பாசவுணர்வோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதுதான் உறுதி.
கட்சிகள் மாறும்போது, கொடிகளின் நிறம் மாறலாம், ஆனால் மனிதருடைய நிறங்கள் மாறக்கூடாது, அதற்கு உதாரணமாக எஸ்.வி.சேகரை தைரியமாக நாம் சொல்லமுடியும்.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் அவர் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்குண்டு. இப்போது கூட யாரை பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த நாடகத்தில் சில காட்சிகளை பார்த்தோம். இதையெல்லாம் பார்க்கின்றபோது, 2026 தேர்தலுக்கு இவரை பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறும் ஒன்றும் தேவையில்லை.

1996 செப்டம்பர் 18-ஆம் தேதி எஸ்.வி.சேகர் அவர்களின் மூவாயிரத்தி ஐந்நூறாவது நாடக விழா நடந்தபோது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அதில் கலந்துகொண்டார். எஸ்.வி.சேகர் போட்ட நாடகத்தின் தலைப்பு என்னவென்றால் “தத்துப்பிள்ளை”. அதில் கலந்து கொண்ட கலைஞர் வாழ்த்துகின்றபோது சொன்னார், சேகர் ஒரு தத்துவப் பிள்ளை என்று வாழ்த்தினார்.

தன்னுடைய கடமையை நிறைவேற்றும் எஸ்.வி.சேகர்

தத்துப்பிள்ளை நாடகத்தில் நடித்த எஸ்.வி.சேகருக்கு தத்துவப் பிள்ளை என்று ஒரு பட்டத்தை வழங்கினார். அடுத்து, 5 ஆயிரத்தி 600-ஆவது நாடக விழா 2010 மே 7-ஆம் தேதி நடந்தபோதும் கலைஞர் கலந்துகொண்டு பாராட்டினார். அப்போது எஸ்.வி.சேகர் போட்ட நாடகத்தின் தலைப்பு, ‘அல்வா’.

இதே நாரதகான சபாவில் தான் நடந்தது. அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த நானும் அந்த நாடக விழாவில் கலந்து கொண்டேன். அல்வா நாடகத்தையும் நானும் பார்த்தேன். டைமிங்கா டயலாக் பேசுவதில் அவருக்கு ஈடு இணையற்றவர் யாரும் கிடையாது. அந்த அளவிற்கு எஸ்.வி.சேகர் பேசுவார். 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் இப்போது சொல்லும் போது இப்போது இருக்கின்ற அரசியலுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள். அதுதான் அந்த கலையினுடைய நுணுக்கம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். டைமிங்கை தாண்டி, ரைமிங்க்காக டயலாக் பேசுவதில் எஸ்.வி.சேகர் ஒரு பெரிய கில்லாடி என்று அந்த விழாவில் நான் சொன்னேன்.

எஸ்.வி.சேகர் நாடகத்தில் மட்டும் அல்ல, நேரிலும் எல்லோரையும் சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். எம்.எல்.ஏ-வாக இருக்கும் போது அங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் எல்லோரையும் சிரிக்க வைப்பார். அவர் உள்ளத்தில் கலைஞர் இருப்பது என்னை பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். நாடகத்துறையில் மட்டுமல்ல, சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றைக்கு எஸ்.வி.சேகர் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் அந்த விழாவில் கலந்து கொண்ட கலைஞர் சொன்னார், மருந்து கேப்சூல் போல மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து வைக்கின்ற விஷயத்தில் எம்.ஆர்.ராதா-விற்கு பிறகு எஸ்.வி.சேகரை தான் நான் காண்கின்றேன் என்று அன்று பாராட்டினார்.

15 ஆண்டுகளை கடந்தும், அந்த சிரிப்பு கேப்சூல் இன்னும் வீரியத்தோடு பயன்பட்டு வருகிறது.
திரைப்படங்களில், வசனத்தை மறந்துவிட்டால், ‘ரீ-டேக்’ எடுத்து, அந்தத் தவறை திருத்திக்கொள்ள
முடியும். ஆனால், நாடகத்தில் அப்படி ‘ரீ-டேக்’ எடுக்க முடியாது. அதனை பேசி சமாளித்து, நடித்தாகவேண்டும். நாடகத்தில் சிறிய தவறு செய்தாலும் அது காட்டி கொடுத்துவிடும் என்பதும்
தெரியும்.

ஏனென்றால், நாடகத்தில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்றும், நாடகத்தை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதும் எனக்கு தெரியும். 1971-ல், அதற்கு பிறகு 1989-ல் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியிருக்கிறேன்.

எஸ்.வி.சேகருக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம்!

“முரசே முழங்கு”, “திண்டுக்கல் தீர்ப்பு”, வெற்றி நமதே ஆகிய மூன்று நாடகங்களை நடத்தியிருக்கிறேன். அதற்குப் பிறகு சின்னத்திரையில், குறிஞ்சி மலர், சூர்யா நாடகத்தில் நடித்திருக்கிறேன்.

பிறகு ஒரே இரத்தம் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன். எனக்கு நடிப்பில் அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறையும் நாடக அரங்கேற்றம் என்பது ஒரு பிரசவ வேதனை மாதிரி. ஏனென்றால், ஒரு ஊரில், ஒரு முறை நாடகம் அரங்கேற்றினால் வெற்றிப் பெற்றுவிடும். ஆனால், அடுத்த ஊருக்கு போகும்போது அது வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் ஏற்படும். அந்த அளவிற்குதான் நாடகத்தை நாம் நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில், அப்படிப்பட்ட துறையில் ஏழாயிரமாவது நாடகத்தை நடத்துகிறார் என்றால், ஒரு பெரிய திறமை வேண்டும். திறமைபடைத்தவராக எஸ்.வி.சேகர் விளங்கிக் கொண்டிருக்கிறார். இது ஒரு மிகப் பெரிய சாதனை.

அவருடைய இந்த வெற்றி என்பது, அவரது கலைத்திறமைக்கான வெற்றி. கலைப் பணிகளுக்கான வெற்றி. நாடகம், கூத்து, சினிமா, டி.வி சீரியல், வெப் சீரியஸ் என்று கலையின் வடிவங்கள் மாறலாமேயொழிய, எந்தக் கலையாக இருந்தாலும், எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் சிறந்த சிந்தனையும், அழகிய கலைநயமும் இருந்தால் அவற்றை எவராலும் வெல்ல முடியாது.

எஸ்.வி.சேகருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அப்படிதான் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். அப்படி செயல்பாட்டால் தான் நாடகக் கலை காப்பற்றப்படும்.

எஸ்.வி.சேகர் 1960 முதல் நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக இயங்கிக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டு கலைப் பயணத்தில் அவர் எத்தனையோ பேரை பார்த்திருப்பார். எத்தனையோ போட்டிகளை சந்தித்திருப்பார். எத்தனையோ நெருக்கடிகளை சமாளித்திருப்பார். அத்தனையும் மீறி கலைப்பணி ஆற்றிய காரணத்தினால்தான் அவரை நாம் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், துணிச்சலோடு விமர்சனம் செய்கின்ற ஆற்றல் அவருக்குத்தான் உண்டு. அதைத் தொடர்ந்து இன்றைக்கு சோசியல் மீடியாவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவர் பேசுகிறபோது கோரிக்கை ஒன்றை வைத்தார். அவர் தந்தை வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய தெருவிற்கு அவருடைய தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அந்தப் பெயர் விரைவில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த பெயர் நிச்சயமாக விரைவில் சூட்டப்படும் என்று தெரிவித்து, நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். நான் ஏற்கனவே வைத்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel