’ஆளுநர் கருத்தை அரசும், முதல்வரும் பெரிதுபடுத்துவதே இல்லை’: எ.வ.வேலு

Published On:

| By christopher

அரசும், முதல்வரும் ஆளுநர் கருத்தை பெரிதுபடுத்துவதே இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் வரும் ஜூன் மாதம் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு திறப்பு விழா மற்றும் இறுதிகட்ட பணிகள் குறித்து நேற்று(மே 7) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ”கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை முதல்வர் குறிப்பிட்ட தேதியை அறிவித்து விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

mk stalin did not care about governor rn ravi hate speech

நூலகத்தில் 15ம்தேதிக்குள் நூல்கள் அடுக்கும் பணிகள் முழுமை அடைந்துவிடும். மே 30ம்தேதிக்குள் கலைஞர் சிலை மற்றும் அனைத்து கட்டிட பணிகளும் முழுமை பெறும்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக வேலை வாய்ப்பை உருவாக்க மட்டுமே முதல்வர் வெளிநாடு செல்கிறார்.” என்றார்.

கலைஞர் நூலகத்தில் பிறமொழி நூல்கள் குறித்த ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

“அரசு செம்மையாக நடைபெற வேண்டுமானால் ஆளுநர் உந்துசக்தியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உதவுகிற மனம் படைத்தவராக இருக்க வேண்டும். அப்படித்தான் அரசும் கருதும்.

ஆனால் ஆளுநர் போகிற போக்கில் ஏதேதோ கருத்தை சொல்லி கொண்டிருக்கிறார்.

ஆளுநரின் கருத்தை தமிழ்நாடு அரசும், முதல்வரும் பெரிதுபடுத்துவதே இல்லை.

தமிழ்நாட்டிற்கு என்று தனிக்கொள்கைகள் உண்டு. அண்ணா காலத்தில் இருந்தே தமிழ்நாடு இருமொழிக்கொள்கை உடைய மாநிலம்.

தமிழ், ஆங்கிலம்தான் இங்கு இருக்கும். தமிழுக்கு தான் இங்கு முதலிடம். இணைப்பு மொழியான ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடம்.

அண்ணா, கலைஞரின் இருமொழிக்கொள்கையை தான் முதல்வர் ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார்.

அதன்படி கலைஞர் நூலகத்தில் தமிழ் ஆங்கில புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. கலைஞர் நூலகத்தில் இருமொழிக்கொள்கையே கடைபிடிக்கப்படும்” என்று பேசினார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்!

லக்னோ அணியிலிருந்து விலகிய மார்க் உட்: காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel