ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி : ஸ்டாலின் வாழ்த்து!
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 9) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள 90 தொகுதிகளுக்கும் முதல் முறையாக செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன், பிபிஐ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்து களமிறங்கின.
வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டு 42 இடங்களிலும், 39 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஒரே தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், அந்த தொகுதியை வசமாக்கியது.
இந்த வெற்றியின் மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார். பட்காம், கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட அவர் பெரும் வெற்றியை எட்டியுள்ளார்.
மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மக்கள் அளித்துள்ள தீர்ப்பு!
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “அமோக வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கும், வாழ்த்துகள்! இது இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி.
மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கான விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் அளித்துள்ள தீர்ப்பு இது.
இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தனித்து 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 29 இடங்களிலும், 81 தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இரவோடு இரவாக சாம்சங் போராட்ட குழு நிர்வாகிகள் 10 பேர் கைது!
நயன் – விக்கி திருமண வீடியோ : விரைவில் வெளியீடு!