பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்… இன்னும் 20 ஆண்டு திமுக ஆட்சி தான்! நெல்லை கள ஆய்வில் ஸ்டாலின்

Published On:

| By Aara

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு திட்டங்களையும் கட்சி செயல்பாடுகளையும் ஆய்வு செய்து வருகிறார். mk stalin confidence dmk

அந்த வகையில் . நேற்றும் இன்றும் (பிப்ரவரி 6,7) திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் திருநெல்வேலி மாவட்ட திமுகவின் கள ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.

இந்த கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு,
“என்னை நம்பி இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்திருக்கிற தலைவர் அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதைவிட, இனி வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளையும் திமுகவை வெற்றி பெற வைத்துக் காட்டுவேன். இப்போதே நீங்க இந்த அஞ்சு தொகுதிகளையும் டிக் அடிச்சு வச்சுக்கலாம் தலைவரே” என்று உறுதி கொடுத்தார். அதை நிர்வாகிகளோடு முதலமைச்சர் ஸ்டாலினும் கைதட்டி வரவேற்றார்.

அதற்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

“இன்று நான் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்ததில் எனக்கு புதிய தெம்பு ஏற்பட்டிருக்கிறது. சிவாஜி, மஸ்தான், தம்பிதுரை, தென்காசி கா.மு.கதிரவன் என நம் கழகத்தின் மூத்த முன்னோடிகள் பலர் இந்த மண்ணில் திமுகவை பல்வேறு தியாகங்கள் செய்து வளர்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கழகத்தை நாம் மேலும் வளர்க்க வேண்டும்.

2007இல் நான் திருநெல்வேலியில் இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்த போது, என்ன உணர்வில் இருந்தேனோ அதே உணர்வில் தான் இன்று மாவட்டத்தில் மக்களின் எழுச்சியை பார்த்தபோது இருந்தேன். இங்கேயே 6 கிமீ தூரம் நடந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்போதை விட இப்போது வயது ஆனாலும் கூட, மக்கள் ஓடி வந்து என் கையை பற்றி கொள்ள வரும்போது இந்த மக்களுக்கு நாம் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசிய ஸ்டாலின்

கடந்த மூன்று பொதுத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் ஏற்பட்ட ஓட்டு வித்தியாசங்களை பட்டியலிட்டு காட்டினார்.

“அம்பாசமுத்திரம் தொகுதியை தொடர்ந்து நாம் இழந்து வருகிறோம். இங்கே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பலரும் என்னிடம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி கோரிக்கைகளை வைத்தார்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழி செய்வோம். அதேபோல வருகிற பட்ஜெட்டில் முக்கியமான நல்ல அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன.

நீங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்கு எந்த மனக்குறையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். நேரு அவர்கள் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் எழுச்சியை உணர்கிறேன்.

ஞாபகம் வச்சுக்கோங்க. இன்னும் இருபது ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தான். இதை மனதில் வைத்து உற்சாகமாக நீங்கள் உழைக்க வேண்டும்” என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைத்து நிர்வாகிகளோடும் தோள் மேல் கை போட்டு அவர்கள் பெயரைச் சொல்லி நலம் விசாரித்து போட்டோ எடுத்துக் கொண்டார் ஸ்டாலின்.

அப்போது அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, சாப்பிட்டு போகலாம் என பொறுப்பு அமைச்சர் நேரு சொன்னபோது… ஓரமாக நின்று திரும்பி பார்த்து, “என்ன பிரியாணி? மட்டன் பிரியாணியா? சிக்கன் பிரியாணியா?” என உற்சாகமாக கேட்டு நிர்வாகிகளை சாப்பிட அனுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின். mk stalin confidence dmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share