கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணியில் இன்று (ஆகஸ்ட் 7) பங்கேற்றபோது மரணமடைந்த திமுக கவுன்சிலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 வது நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த பேரணியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சியின் 146 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் இன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சண்முகம் வழியிலேயே மரணமடைந்தார்.
இது அமைதி பேரணியில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கையில், ”பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146- ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு. சண்முகம் இன்று (7-8-2023) கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன்.
மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர். உறவினர், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அமைச்சர் பிடிஆர் ஆடியோ வழக்கு: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி