புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்
பாஜகவின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஐபிஎஸ் அதிகரிகள்!
”புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வும் – காங்கிரசும் பாடுபட்டால், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பா.ஜ.க. செயல்படுகிறது. இதைப் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். இங்கு நம்முடைய வேட்பாளராக இருக்கும் வைத்திலிங்கம் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது, அவருடன் மோதினார் ஒரு துணைநிலை ஆளுநர்.
பா.ஜ.க.வின் கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்களைப் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக போட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கினார், ஒரு துணைநிலை ஆளுநர். அதுமட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அரசையே புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள்.
மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி ரேஷன் அரிசியைத் தடை செய்தார்கள். புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும், வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நம்முடைய நாராயணசாமிக்கு ஒத்துழைக்காமல் அரசியல் சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பா.ஜ.க. இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளுநராக இருந்த அம்மையார் கிரண் பேடி. ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர் அவர், சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார்.
இப்படி, தமிழ்நாட்டிலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.விற்கு அங்கு பெரிய பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கதாநாயகன்!
பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும், புதுச்சேரியின் முன்னேற்றம் – மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான் பா.ஜ.க.வின் கொள்கை.
தமிழ்நாடு போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்கிட வேண்டும். ஒட்டுமொத்தமாக எல்லோரும் தில்லிக்குக் கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா. அதனால்தான், கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர்.
இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயகப் பாதையில் கம்பீரமாக நடைபோட வேண்டும். மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்திருக்கிறோம்.
புதுச்சேரி முன்னேற வேண்டும் – புதுச்சேரி மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், பா.ஜ.க. ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும். இந்தியா கூட்டணி தில்லியில் ஆட்சியில் அமர வேண்டும். ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது, சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறோம்.
அதில் முக்கியமான வாக்குறுதியான, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான, மாநில அந்தஸ்து ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், நிறைவேறப் போகிறது.
கை சின்னத்தில் வாக்களிப்பது மூலமாக இத்திட்டங்களைச் செயல்படுத்தித் தர எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசும் – தி.மு.க.வும் நாட்டு நலன்களில் அக்கறை கொண்டு வாக்குறுதிகளை அளிக்கிறது. 2006-இல் தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந்ததோ, அப்படி சோனியா, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் அளித்துள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இன்றைக்கு நாட்டைக் காக்கப் போகும் கதாநாயகன்.
இந்தியா கூட்டணி சார்பில், சமூகநீதியைக் காப்பாற்ற – இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க – மதச்சார்பின்மையை நிலைநாட்ட – இந்தியா ஜனநாயக நாடாகத் தொடர – சபதம் எடுத்துள்ளோம்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?
ஆனால், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். ஒரு நாட்டின் பிரதமர் – அதுவும் பத்தாண்டு காலம் ஆட்சிசெய்த பிரதமர் என்ன பேசுகிறார்? மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார். சாதியின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் ஒருமுறைகூட, சமூகநீதியைப் பாதுகாப்பேன் என்றோ, இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவேன் என்றோ எங்கும் மருந்துக்கு கூட சொல்லவில்லை. ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்று எங்கேயாவது வாய் திறந்தாரா? ஆனால், மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று சொல்கிறார். பட்டியலின – பழங்குடியின – மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று சொன்னாரா? அதுவும் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும், நாட்டு மக்களுக்குப் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்ததுதான் பா.ஜ.க. அரசு. அதை லாபம் ஈட்டும் தொழிலாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் இங்கு விலையை அதிகரிப்பவர்கள், அங்கு விலை குறைந்தால் இங்கும் குறைக்க வேண்டுமா, இல்லையா? ஆனால், மோடி அரசு குறைக்கவில்லை.
அது மட்டுமா? உக்ரைன் – ரஷ்யா போரின்போதும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை வாங்கினார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பயன் பொதுமக்களுக்குச் சென்று சேரவில்லை. மோடி ஆட்சிக்கு வரும்போது 119 டாலராக இருந்த ஒரு பேரல், ஒரு கட்டத்தில் 29 டாலர் வரை சரிந்தது. ஆனால், அந்த அளவு பெட்ரோல், டீசல் விலை மக்களுக்காகக் குறைக்கப்பட்டதா? ஒரு சில கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பெரிய அளவில் பலனடைந்தார்கள். கோடிக்கணக்கான மக்களுக்காக விலையைக் குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்டினால் போதும் என்று ஆட்சி நடத்தும் இந்த இரக்கமற்ற பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.
கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரி இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம். மின்சாரத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. மின் கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் துணைநிலை ஆளுநர்களை வைத்து, அரசியல் கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தார்கள். கிரண் பேடி காமெடிகள் முடிந்த பிறகு, சகோதரி தமிழிசை வந்தார். புதுச்சேரியில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தார். தேர்தல் வந்ததும் பா.ஜ.க.விற்கே மீண்டும் சென்றுவிட்டார்கள். புதுச்சேரி வரலாற்றில் ராஜ் நிவாஸ் வாசலிலே, முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுச்சேரிக்கு பா.ஜ.க. செய்த சாதனை.
இங்கு வாக்கு கேட்டு வந்த பிரதமர் மோடி என்ன கூறினார். “பெஸ்ட் புதுச்சேரி“. தொழில் – சுற்றுலா – கல்வி போன்றவற்றில் புதுச்சேரியை பெஸ்ட் ஆக்குவோம் என்று சொன்னாரே – செய்தாரா? காங்கிரஸ் அரசிடம் ஏதோ ரிப்போர்ட் கார்டெல்லாம் கேட்டாரே – பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே? வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி ரிப்போர்ட் கார்டு வேண்டாம். நாங்கள் கேட்பது, ஒரிஜினல் ரிப்போர்ட் கார்டு. நாராயணசாமி கட்சி மேலிடத்தைக் கேட்டு நடக்கிறார் என்று குறை கூறினார். ஆனால், இப்போது வேறு கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ரங்கசாமியைத் தங்களின் பேச்சைக் கேட்கச் சொல்லி என்ன பாடு படுத்துகிறார்கள்? அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏதோ பெரிதாக ஆதங்கப்பட்டுப் பேசினீர்களே.
அடிக்கடி கட்சி மாறும் நமச்சிவாயம்
இன்றைக்குப் புதுச்சேரியில் முதலமைச்சராக இருப்பது யார்? ரங்கசாமி. உங்கள் கூட்டணியில் எது பெரிய கட்சி? ரங்கசாமியின் கட்சி. புதுச்சேரியில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது? ஒரே ஒரு தொகுதி. அதிலும் பா.ஜ.க.தான் போட்டியிடும் என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்தீர்கள். ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணமே நமசிவாயம்தான். இப்போது அந்த நமசிவாயத்திற்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்தக் கட்சியையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஜனநாயகமா? உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருந்தவரை, தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். நமசிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார் என்ற வாங்கிப் பார்த்தப்போது எனக்கே தலைசுற்றியது.
தி.மு.க.வில் இருந்த நமசிவாயம் – ம.தி.மு.க.வுக்குத் தாவினார். ம.தி.மு.க.-இல் இருந்து த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து புதுவை மாநில காங்கிரசுக்கு தாவினார். புதுவை மாநில காங்கிரசில் இருந்து மீண்டும் த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார். இன்னும் இரண்டு மாதம் கழித்து நான் வந்தால் அவர் எந்தக் கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமசிவாயத்திற்கே தெரியாது.
பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? “நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்” என்று வீரவசனம் பேசினாரே பிரதமர் மோடி. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் கரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா? படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா? அவர் விஷ்வகுரு இல்லை, மவுனகுரு.
அதுமட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல். நாடே அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததே. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பா.ஜ.க. ஆட்சியில் கேள்விக்குறியாக இருக்கிறது. ரங்கசாமி டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை இங்கு நடத்திக்கொண்டு இருக்கிறது.
வேடிக்கை பார்க்கும் ரங்கசாமி
புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கிறதா? ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, பட்டியல் இனத்து மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி அவர்களுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டிருக்கிறதா? பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இங்கே மூடப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்த ஊழியர்களின் குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வந்தால்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானோதயம் வரும். கடந்த 3 ஆண்டுகளாக அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இவர்கள்? ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி – ஒரே கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்ளே? புதுச்சேரியில் ஓடியதா?
புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற விடுதலையை, மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்க விட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி, இப்போது எந்த முகத்துடன் பா.ஜ.க.வுக்காக வாக்குகள் கேட்டு வருகிறார்?
இதில் மற்றொரு பக்கம் பழனிசாமியின் அ.தி.மு.க. வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சிம்ப்ளி வேஸ்ட். பா.ஜ.க. வேட்பாளரின் நன்மைக்காகதான் அ.தி.மு.க. இங்கு தேர்தலில் நிற்கிறது என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
பல்வேறு பண்பாடுகள் – சாதி, இன, மொழி கடந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மக்கள் – ஒன்றிய மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகக் கூடாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் தகனம்!
ரெய்டில் சிக்கிய நயினார்: 4 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்கும் ஐடி!