கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல என்று மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 16) கடுமையாக விமர்சித்துள்ளார். Stalin condemned Vikatan blocked
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விகடன் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் ஒன்று வெளியாகியிருந்தது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 15) இரவு முதல் விகடன் இணையதளம் பலரால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விகடன் அளித்த விளக்கத்தில்,
“பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
ஒரு வேளை விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல. பாஜக-வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Stalin condemned Vikatan blocked