நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இந்தநிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது, மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது மிகவும் மலிவான செயல். இந்த நடவடிக்கையானது பாஜக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும், விரக்தியையும் வெளிக்காட்டுகிறது.
பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக தொடர்ந்தாலும், ஹேமந்த் சோரன் பாஜகவுக்கு அடிபணிய மறுத்துள்ளார்.
பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டாலும், அவரது மன உறுதி பாராட்டுக்குரியது. பாஜகவின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்து போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு உத்வேகமளிக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்ஜெட்: வந்தே பாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு!
கூட்டணி யாரோடு..? பாமக பொதுக் குழுவில் அரசியல் தீர்மானம்!
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 1.3 லட்சம் கோடி அறிவிப்பு!