தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திமுக தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில், திராவிடவியல் கோட்பாடுகள் – திராவிட மாடல் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கேள்வி – பதில்!
திராவிட மாடல்தான் எனது பாதை!
“இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். கழகத்தை வழிநடத்த புதிய திட்டம் என்ன வைத்துள்ளீர்கள்?
பதில்
”அண்ணா வழியில் அயராது உழைப்போம். கலைஞர் கட்டளையை கண்போல் காப்போம் என்பதன் அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போதும் எனது பாதை. கொள்கையும், கோட்பாடும் எவ்வளவு முக்கியம் என்பதை கழக தொண்டர்கள், உடன்பிறப்புகள் உணரவேண்டும்.
இனி தமிழ்நாட்டை திமுக தான் ஆளும் என்கிற நிலை இருக்க வேண்டும். என்னிலிருந்து கடைகோடி தொண்டன் வரை இந்த லட்சியத்திற்காக உழைக்க வேண்டும். அதுதான் என் விருப்பம்”.
சாதனை; சவால்!
ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனை என்ன? சவால் என்ன?
பதில்
”மக்கள் முகங்களில் காணக்கூடிய புன்னகைதான் என் சாதனை. நிதி நெருக்கடிதான் மிகப்பெரிய சவால்”
40க்கு 40 தொகுதிகள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
பதில்
”தமிழகம், புதுவை மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு.
இந்தியா முழுவதும் சமூகநீதியில், கூட்டாட்சி அடிப்படையிலான நம்பிக்கையான ஆட்சி அமைய வேண்டும் என்பது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்”.
நீட் விலக்கு!
நீட் தேர்வு விலக்கு கிடைக்குமா? கிடைக்காதா?
பதில்
“முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. காலதாமதத்தால் நடக்காது என நினைக்காதீர்.
நீட் தேர்வில் மிகப்பெரிய சமூக அநீதியை பாஜக அரசு செய்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் அதற்கு பாடம் புகட்டுவதாக அமையும்.
விமர்சனங்களை மனதிற்குள் எடுப்பதில்லை!
தங்கள் மீது விமர்சனம் செய்பவர்களை எப்படி எளிதாக புறந்தள்ளிவிட்டு போகிறீர்கள்?
பதில்
“அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசப்படுவது என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதிற்கு எடுத்து செல்வதே இல்லை.
என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது என் வாழ்வின் கடமையாக கருதுகிறேன்”.
பாஜகவுடன் கூட்டணியா?
பாஜக-வுடன் திமுக சமரசத்துக்குப் போய்விட்டதாக சிலர் சொல்கிறார்களே?
பதில்
சிரித்துக்கொண்டே…. “இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது”.
மழை வடிகால் பணிகள்!
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடியும்?
பதில்
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது. மழைக்கு முன்பு வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
கிறிஸ்டோபர் ஜெமா
நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை : வாடகைத் தாய் சர்ச்சையில் திடீர் திருப்பம்!
76 மத்திய அமைச்சர்களை அனுப்பும் பிரதமர்: அண்ணாமலை தகவல்!