”போர்க்களத்தைவிடக் கொடூர சூழல்” : விவசாயிகள் போராட்டம் குறித்து ஸ்டாலின் வேதனை!

Published On:

| By Selvam

Central government on farmers protest

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராடும் உழவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுகா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் தலைநகர் டெல்லியில் பிப்பரவரி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் விவசாயிகளை போலீஸ் கைது செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Central government on farmers protest

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இந்தியத் தலைநகர் டெல்லியிலும், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போர் மேகங்கள் சூழந்தது போன்ற பதற்றத்தை மத்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் ஆணிப் படுக்கைகள், எல்லாத் திசையிலும் பாதுகாப்புக் காவலர்கள், கடுமையான பரிசோதனை நடவடிக்கைகள்.

தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? மத்திய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள்.

திமுக அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது. Central government on farmers protest

அசைந்து கொடுக்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது. அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. Central government on farmers protest

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?

மத்திய பா.ஜ.க அரசின் உழவர்கள் விரோத வேளாண் சட்டங்களைத் தி.மு.கவும் தோழமைக் கட்சிகளும் எதிர்த்தபோது, அந்தச் சட்டங்களை ஆதரித்தது அ.தி.மு.க.

பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய பா.ஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு முழுமையாகத் துணை நின்ற இயக்கம் திமுக.

Central government on farmers protest

சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது அதிமுக, நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு, மாநிலங்களின் வரி வருவாயைப் பறிக்கும் ஜி.எஸ்.டி, மின்னுற்பத்தியையும் விநியோகத்தையும் சீரழிக்கும் உதய் மின்திட்டம் என மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநிலக் குரோத திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் ஆதரவு தந்து, உரிமைகளை அடகு வைத்து, கஜானாவைக் கொள்ளையடித்து ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து கொண்டவர்கள்தான் அ.தி.மு.க.வின் பழனிசாமியும் அவரது அமைச்சரவைக் கூட்டாளிகளும்.

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகள் அனைத்திற்கும் துணை நின்று ஆதரித்த அ.தி.மு.க.தான் இப்போது பா.ஜ.க சொல்லிக் கொடுத்ததுபோலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜ.க செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அ.தி.மு.க. மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தடியடி.. கண்ணீர் புகை குண்டுகள்.. பரபரக்கும் களம் : விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?

பொன்முடி சூமோட்டோ வழக்கு: விசாரணை தேதி மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share