“தமிழ்நாட்டை பார்த்தால் நக்கலா?” : திருவண்ணாமலையில் மோடி, நிர்மலாவை விளாசிய ஸ்டாலின்

அரசியல்

தமிழ்நாட்டை பார்த்தால் பிரதமர் மோடிக்கும்,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நக்கலாக தெரிகிறதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 3) திருவண்ணாமலையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணா துரை, ஆரணி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

R.T.I.யையுடன் மோடி கூட்டணி

அப்போது அவர், “ பிரதமர் மோடி தோல்வி பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் I.T. துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்.

Image

E.D.யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார்… E.D. – I.T. – C.B.I. – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I.யையும் கூட்டணியில் சேர்த்திருக்கிறார்.

இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால் – R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கிறார். மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது.

இது ஏப்ரல்தான்! இன்னும் மே மாதம் இருக்கிறது… ஜூன் மாதம் இருக்கிறது… உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி தெளிந்துவிடும்!

பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு விடுதலை கிடைத்துவிடும்! ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்!

”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

Image

பேட்டி அல்ல சூட்டிங்

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி-சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார்! அதிலாவது உண்மையைப் பேசினாரா?

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார் என்றால் ’சபாஷ்’ போட்டிருக்கலாம்!

கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன்! அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லியிருந்தால், கை தட்டியிருக்கலாம்.

உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்துவிட்டேன். விலைவாசியைக் குறைத்துவிட்டேன். நதிகளை இணைத்துவிட்டேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கைதினைத் தடுத்துவிட்டேன். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்திவிட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம்.

நியூஸ் டைமா? காமெடி டைமா?

ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே! தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே! பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதற்கு பதில் சொல்லவில்லை!

அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தவர்கள், அது நியூஸ் டைம்-ஆ? இல்லை, காமெடி டைம்-ஆ? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார்கள்! ஏன் என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் – தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்… பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!

பிரதமரே… ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே… உங்களுக்குத் தெரியாதுதானே? டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தார்களே… அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே… அதுவும் உங்களுக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் I.T. – E.D. – C.B.I. இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது! நாங்கள் நம்பிவிட்டோம்.

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால் – நாளைக்கு உங்களுக்கும் – குஜராத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்! அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள்.

நிதியமைச்சர் வந்தார் நிதி வரவில்லை

அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் – 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொல்லவில்லை! கேட்ட நிதியையும் தரவில்லை!

ஆனால் என்ன சொன்னார் தெரியுமா? “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னிடம் பிரதமர் மோடி சொன்னார். சொன்னபடி, நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார், நிதி வரவில்லை! நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட்கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார்.

அவரின் பேச்சுகளைப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச்சைப்படுத்தினார் அந்த அம்மையார்!

ரூ.5000 கோடி நீங்க கொடுத்தீங்களா?

ஆணவச் சிந்தனை கொண்ட அவர் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார்கள்.

அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது! ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன்…

பொதுவாக A.D.B. – K.F.W. மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் – அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக்கிற்கு வந்துதான் மாநில அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் – பொருந்தச் சொல்லுங்கள் … ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லாமல் – உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள்…

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்!”

என் கணக்கு

ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு… மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை… டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை… இராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை! இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம்! எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள்!

நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன்… நாங்கள் கேட்கும் நிதி, N.D.R.F. என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய S.D.R.F. என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே… வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது! நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக்கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும்… அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் – நக்கல் – நையாண்டி – கிண்டல் – கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது… பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை” என்று பிரதமரையும், நிதியமைச்சரையும் கடுமையாக விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“செந்தில் பாலாஜிக்கு ஆயுள் முழுவதும் சிறை தான்”: கரூரில் எடப்பாடி காட்டம்!

காமெடி சேனல்ல அரசியல் பேட்டி: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

3 thoughts on ““தமிழ்நாட்டை பார்த்தால் நக்கலா?” : திருவண்ணாமலையில் மோடி, நிர்மலாவை விளாசிய ஸ்டாலின்

  1. அவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் எப்போதும் இருக்காது; அவங்க தேர்தல்ல நின்னா எம்பி ஆனாங்க. புறக்கடை வழியாத்தானே வந்தாங்க. அவங்களைப் பத்தி சுப்பிரமணிய சுவாமியே கிழிகிழினு கிழிச்சு தொங்க விட்டாரே, அப்ப கூட அவரை கண்டிச்சு ஒருத்தன் கூட அவங்க கட்சியிலிருந்து வாயைத் திறக்கவே இல்ல தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *