பழனிசாமிதான் ’நம்பர் ஒன்’ – எதில் தெரியுமா?: ஸ்டாலின் தாக்கு!

Published On:

| By Kavi

காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.

இன்று (ஏப்ரல் 16) காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்டார்.

திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பி, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14- வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாட்டை நம்முடைய ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், LEADER ஆக்கி இப்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டோம்.

எந்த சமூக – பொருளாதாரக் குறியீட்டை எடுத்துப் பார்த்தாலும், அதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத்தான் இருக்கும்!

நீங்கள் எதில் ’நம்பர் ஒன்’ தெரியுமா? பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்தீர்களே, அதில் மட்டும்தான் ’நம்பர் ஒன்!’ எப்படியெல்லாம் பிரதமர் மோடிக்கு – ஒன்றிய அமைச்சர்களுக்கு – பா.ஜ.க.வுக்கு லாவணி பாடினீர்கள்! ‘மோடிதான் எங்கள் டாடி’என்று சொன்னீர்களே!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க. இங்கு, இந்தியைத் திணித்தபோது நாம் எதிர்த்தோம். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர் என்ன சொன்னார்? அண்ணா மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார் என்று பச்சைப்பொய்களைப் பேசவைத்து அழகு பார்த்தவர்தான், இந்தப் பழனிசாமி! அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் இயற்கைக் கூட்டணி என்று சொல்லி, செண்டிமெண்ட் மழை பொழிந்தவர்கள்தான் பழனிசாமி நாடக கம்பெனி!

இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி, இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அ.தி.மு.க சில இடங்களில் வென்று பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்”என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. “பொறுத்திருந்து பாருங்கள்”என்று வாய்தா வாங்கியிருக்கிறார்! இதுதான் அவரின் பா.ஜ.க. எதிர்ப்பு லட்சணம்!”

பாலம் பாலு

மேலும் அவர், “உதாரணத்திற்கு டி.ஆர்.பாலு, மூன்று முக்கியமான துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை மட்டும் சொல்லலாமா?

ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக பாலு இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார்.

சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தன.

இதுமட்டுமா! கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், பாடி பாலம்! அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே, 335 பாலங்களைக் கட்டி சாதனை செய்து இருக்கிறோம்.

அதனால்தான், தலைவர் கலைஞரே ’பாலம்’ பாலு என்று அழைத்தார்”என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியை தாக்கி பேசிய அவர், “பிரதமர் மோடி சிரிக்காமல் பொய் சொல்லி இருக்கிறார்.

காசி தமிழ் சங்கமத்தில் உத்தர பிரதேசம் சென்ற நம்முடைய மக்கள், அங்கு நடந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்களாம்.

அதற்கு யாரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நாம் நாளிதழ்களில் படித்து ஆதங்கப்பட்டது… உ.பி முதலமைச்சர் யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், 60 குழந்தைகள் இறந்தன.

மனித வளக் குறியீடு, ஊட்டச்சத்து, சட்டம் – ஒழுங்கு, தனிநபர் வருமானம் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் இடம் என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலை என்ன? இதெல்லாம் எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் உங்கள் மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.

பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு! அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு!

எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்” என கூறி வாக்கு சேகரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

யுபிஎஸ்சி தேர்வு : தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தது யார்?

அனிதாவின்  ‘பருத்திக் கோட்டை’ ஆபரேஷன்… அதிர்ச்சியில் நயினார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel