முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செய்கிறார்.
அங்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை உள்பட பல்வேறு நிறுவனங்களின் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின் போது தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று தெரிகிறது.
எனவே, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்கா பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்களுக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேலும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சீனியர் அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு மேல் உதயநிதி துணை முதல்வர் ஆகப்போகிறார் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபத்தில் பேசியிருந்தார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர, பழுக்கவில்லை என்று பிரஸ் மீட்டில் தெரிவித்திருந்தார். இந்தசூழலில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கங்குவா’ டிரெய்லர்… ரசிகர்கள் ரியாக்ஷன் இதோ!
டாப் 10 நியூஸ்: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் கோட் டிரெய்லர் அப்டேட் வரை!