மக்களுடன் முதல்வர்: கோட்டையில் ரிவ்யூ மீட்டிங்… கேள்விகளால் துளைத்தெடுத்த ஸ்டாலின்

அரசியல்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் முகாம் ஏற்பாடுகள் குறித்து இன்று (ஜூலை 27) கலந்துரையாடினார்.

அரசு துறைகளை தொடர்பு கொள்ளும் போது மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையினை அதிகரித்து அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஸ்டாலின் இன்றைய தினம் ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின்

முகாமிற்கு மக்களுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது? பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா?  எத்தனை முகாம்கள் நடைபெற்றுள்ளன? சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மனுக்கள் பெறப்படுகிறது? அதிகமாக எந்தந்த துறைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகிறது? முகாம்களில் எத்தனை கவுன்ட்டர்கள் மற்றும் கணிணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன? போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

விளக்கமளித்த ஆட்சியர்கள்!

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், முகாம் ஒன்றிற்கு சராசரியாக 900 மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 77 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 19 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ்,  19 கவுன்ட்டர்கள் கணிணி வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்றும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 54 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 18 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 7400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 450 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருவாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் மூர்த்தியிடம் ஸ்டாலின் கேள்வி!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முகாம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், முகாம்களில் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதற்கு அமைச்சர் மூர்த்தி, இத்திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராம கிராமமாக சென்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டதாகவும், முகாம் நடைபெறும் விவரம் குறித்து சுவரெட்டிகள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ், “மக்களுடன் முதல்வர்” திட்டமானது ஒரு மகத்தான திட்டம் என்றும், கோரிக்கைகள் விரைந்து நிறைவேறுவதால் இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்வதாகவும், தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, நிர்வாகப் புரட்சி செய்து வருவதாகவும், அரசு அலுவலகங்களை நாடி மக்கள் சென்ற காலம் போய், மக்களைத் தேடி அரசு அலுவலர்கள் வருகை தந்து, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட கேட்டுக் கொண்ட கோரிக்கையில், தான் அனுப்பிய 5 கோரிக்கைகள் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பொதுமக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்திலிருந்து சந்திரன், மின்சார இணைப்பு பெயர் மாற்றத்திற்காக காலை 9 மணிக்கு வந்து மனு அளித்தாகவும், சிறிது நேரத்திலே பெயர் மாற்றம் செய்து அதற்கான உத்தரவினை வழங்கி விட்டதாகவும், மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கேயத்தைச் சேர்ந்த பரிமாளா, தையல் இயந்திரம் கோரி மனு அளித்தாகவும், உடனடியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டதாகவும், அதற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெஷ்மி, மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு இன்று காலை விண்ணப்பித்தாகவும், உடனே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனியாண்டி, சக்கர நாற்காலி கோரி இன்று விண்ணப்பித்தாகவும், உடனடியாக தனக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டதாகவும், அதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர், முதன்மைச் செயலாளர் அமுதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெட்பூல் & வோல்வரின்: விமர்சனம்!

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா? லிஸ்ட் போட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *