“தும்மினால் கூட செல்போனில் படம் எடுத்து விடுகிறார்கள்” – ஸ்டாலின்

அரசியல்

திமுகவை விமர்சனம் செய்ய இன்றைக்கு பல பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் தும்மினால் கூட அதை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 18) திருவேற்காட்டில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “அமைச்சர் நாசருடைய மகள் மற்றும் மகன் திருமணத்தை நான் தான் நடத்தி வைத்தேன். இன்று நாசருடைய பேத்தி திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் இளைஞரணியின் செயலாளராக இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் மாதத்திற்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக கிராமப்புறத்திற்கு தான் அதிகமாக செல்வேன்.

நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறபோது எனக்கு துணையாக ஆவடி நாசர், பல்லாவரம் சிங்காரம், நாகையைச் சேர்ந்த அசோகன் ஆகிய மூவரும் தான் என்னுடன் எப்பொழுதும் வேனில் வருவார்கள்.

அந்த வேனில் அதிகமாக நாசர் தான் தூங்கி கொண்டு வருவார். அவர் தூங்கும் போது நான் அவரை அடித்து எழுப்புவதுண்டு. எனக்கு நீங்கள் துணைக்கு வந்திருக்கிறீர்களா அல்லது உங்களுக்கு நான் துணைக்கு வந்துள்ளேனா என அவரிடம் கேட்பதுண்டு.

உடல் நலம் சரியில்லாதவர்கள் தூக்கம் வருவதற்கு தான் மாத்திரை போட்டு பார்த்திருப்போம். ஆனால் நம்முடைய நாசர் தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை வாங்கி கொண்டு வருவார். ஆனால் அவர் மாத்திரை போட்டாலும் தூங்கி விடுவார்.

நாசர் எதை செய்தாலும் அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். திருமணத்திற்கு அவர் தேதி கொடுத்தவுடன் ஆடம்பரமாக, பிரம்மாண்டமாக பண்ணிவிடுவாரே அதனால் ஏதாவது விமர்சனம் வந்துவிடுமே என்று எனக்கு பயம் வந்துவிட்டது.

நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சனையில்லை. ஆனால், அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அவருக்கு இழுக்கு வந்தால் அது எனக்கு மட்டுமல்ல இந்த கட்சிக்கே ஒரு அவப்பெயர் வந்துவிடும்.

நம்மை விமர்சனம் செய்ய இன்றைக்கு பல பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தும்மினால் கூட அதை செல்போனில் புகைப்படம் எடுத்து வெளியிடக்கூடிய ஊடகங்கள் எல்லாம் இன்றைக்கு உள்ளது.

அதனை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இதனால் நான் அவரிடம் திருமணம் மிகவும் எளிமையாக ஆரவாரம் இல்லாமல் நடத்த வேண்டும். பேனர் எதுவும் வைக்க கூடாது என்று சொன்னேன். என்னுடைய கட்டளையை ஏற்று நாசர் இந்த திருமணத்தை நடத்தியுள்ளார்.

இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று இந்தியா டுடே ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு எனக்கு நம்பர் 1 முதலமைச்சர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.

அப்போது, நம்பர் 1 முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்வதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்று சொன்னால் தான் எனக்கு பெருமை என்று கூறினேன்.

அது இந்த ஆண்டு நிறைவேறி இருக்கிறது. இது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி அல்ல. அமைச்சர்கள் அனைவரின் முயற்சியாலும் தான் இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது.” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஆளுநர் மாளிகையில் இரவில் இறங்கிய பாராசூட்- அதிர்ச்சியில் முதல்வரும் ஆளுநரும்: நடந்தது என்ன?

இந்தியாவின் சுழற்பந்தில் சுழன்ற வங்கதேசம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0