உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சி மூலம் சமூகவலைதளங்களில் நேரடியாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சுவாரசியமான, கேள்விகளுக்கு சமீபத்தில் விரிவான பதில்களை அளித்துள்ளார்.
அவற்றில் எழுப்பப்பட்ட கேள்விகளும், முதல்வரின் பதில்களும் பின்வருமாறு :
கேள்வி: சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்?
பதில்: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாக இருப்பதுதான் அண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி. இதற்கான உத்தரவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெளியிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். இந்திய அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் இருக்க வேண்டும் என்று திமுக அதன் தொடக்க காலத்தில் இருந்தே கூறி வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.
உச்ச நீதிமன்றத்தின் கிளை தமிழகத்தில் அமைய வேண்டும் என்று கோரி வருகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியாவதை அதன் முதல் படியாகவே கருதுகிறேன். மற்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து நடக்கும் என்று நம்புகிறேன்.
கே: நீதிபதிகளை தேர்வு செய்யிற கொலிஜியம் அமைப்பு தொடர்பா உச்சநீதிமன்றத்துக்கும், ஒன்றிய சட்ட அமைச்சருக்கும் நடக்குற மோதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ப: இந்த மோதல் ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக உள்ள நீதித்துறையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதுதான் திமுகவின் விருப்பம்.
நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்தை மதிக்காத இந்த சூழலில், கொலிஜியம் அமைப்பில் ஒன்றிய அரசின் பிரதிநிதி இடம்பெறுவது சமூகநீதி அடிப்படையில் துளியும் உதவாது என்பது என் கருத்து.
கே: ஞாயிற்றுக்கிழமை கூட ஆய்வு பணிய மேற்கொள்ளுறீங்களே?
ப: முதலமைச்சருக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, ஆபிஸ் டைம் என்று எதுவும் கிடையாது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெருமழை பெய்த போதும், மக்கள் நிம்மதியா இருந்தார்கள் என்றால் அதற்கு காரணம் திமுக அரசு முன்கூட்டியே எடுத்த தீவிர நடவடிக்கைகள் தான்.
மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள், கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை பணிகள் போன்றவற்றை நானே நேரில் கள ஆய்வு செய்து வருகிறேன். இதனால், பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுகிறது.
கே: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கள நிலவரம் எவ்வாறு இருக்கிறது?
ப: இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. அந்த தொகுதி எம்.எல்.ஏ ஈ.வெ.ரா திருமகன் மறைவு எதிர்பாராதது. அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு திருமகன் ஈவெரா மறைந்து, அவரது தந்தை போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கனத்த இதயத்தோடுதான் ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் நிற்கிறார். இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
கே: ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா?
ப: ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை. அவையில் அவர் படித்தது அரசின் உரை. ஆகவே, அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை, எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம்.
குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை.
கே: பான் மசாலா, குட்கா ஆகிய போதை பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைய உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறதே?
ப: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்.
3 மாதங்களில் 10673 வழக்குகள் பதியப்பட்டு 150 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதை ஒழிப்பில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக உயர் நீதிமன்றம் பாராட்டி உள்ளது.
கே: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதே?
ப: சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை குமரி முனையில் இருந்து நான்தான் தொடங்கி வைத்தேன். அது மிகப்பெரிய வெற்றிப் பயணமாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னேன்.
ராகுல் காந்தி தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ அவர் பேசவில்லை. மாறாக இந்தியாவிற்கு என்றும் தேவைப்படும் மதச்சார்பற்ற கொள்கைகளை தான் அவர் பேசி வருகிறார்.
அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமை பயணத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது. பல்வேறு தடைகளையும் கடந்து நடைபயணத்தின் முதல் பகுதியை வெற்றிகரமாக முடித்துள்ள ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள்.
கே: ஊடகங்களின் இன்றைய வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
ப: நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் தாண்டி சமூகவலைதளங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
ஆனால் இன்றைக்கு சில சமூக ஊடகங்கள் பிரச்சனையை எழுப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் பிரச்சனைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ, அரசின் விளக்கத்தையோ அவைகள் பேசுவதே இல்லை.
இனியாவது அத்தகைய போக்கை அவர்கள் மாற்றி கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கே: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுகிறார்களே?
ப: இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக்கு போட்டியாக வந்த புது அண்ணன்!